திருவனந்தபுரம்: பாஜகவுக்கு எதிரான சக்திகளை ஒருங்கிணைப்பதில் காங்கிரஸ் தவறிவிட்டதாக சிபிஎம் குற்றம் சாட்டியுள்ளது.
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் மெகா கூட்டணியில் (இண்டியா கூட்டணி) இடதுசாரி கட்சிகள் இடம் பெற்றிருந்தன. சிபிஐ (எம்எல்) 20 தொகுதிகளிலும், சிபிஐ 9 தொகுதிகளிலும், சிபிஎம் 4 தொகுதிகளிலும் போட்டியிட்டன. மொத்தம் 33 தொகுதிகளில் போட்டியிட்ட போதிலும் 3 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றன. இந்த தேர்தல் முடிவு இடதுசாரிகளுக்கு பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், பாஜகவின் தொடர் வெற்றியைத் தடுப்பதற்கு ஏற்ப மதச்சார்பற்ற, ஜனநாயக கட்சிகளை பரந்த மனப்பான்மையுடன் ஒருங்கிணைப்பதில் காங்கிரஸ் பரிதாபகரமான முறையில் தவறிவிட்டதாக கேரள மாநில சிபிஎம் செயலாளர் எம்.வி.கோவிந்தன் குற்றம் சாட்டியுள்ளார். தேர்தல் முடிவு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய எம்.வி. கோவிந்தன், “பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை பின்னுக்குத் தள்ளுவதற்கான பொறுப்பை காங்கிரஸ் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை.
அந்த பொறுப்பை தீவிரமாக எடுத்துக்கொண்டு விடா முயற்சியுடன் செயல்பட்டிருந்தால் தேர்தல் முடிவுகள் வேறு மாதிரியாக இருந்திருக்கும். பாஜகவுக்கு எதிரான அனைத்து சக்திகளையும் ஒருங்கிணைப்பதில் காங்கிரஸ் தவறிவிட்டது.
அதுமட்டுமல்ல, இண்டியா கூட்டணி சார்பில் பிஹார் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்ட 4 தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்களை நிறுத்தியது. இதில், ஒரு தொகுதியில் வெற்றி பெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் பெற்ற வாக்குகளைவிட சிபிஐ மற்றும் காங்கிரஸ் பெற்ற வாக்குகள் அதிகம். நட்பு முறையிலான இதுபோன்ற போட்டிகளின் மூலம் பிராந்திய கட்சிகள் உட்பட பாஜக எதிர்ப்பு சக்திகளின் வலிமையை காங்கிரஸ் குறைத்து மதிப்பிட்டுவிட்டது. காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் தேர்வும் சரியாக இல்லை. இதனால், அதிருப்தியும் கிளர்ச்சியும் கொண்ட ஒரு சூழல் பல தொகுதிகளில் ஏற்பட்டது. இது பாஜகவுக்கு மேலும் சாதகத்தை ஏற்படுத்தியது.
கேரளாவைச் சேர்ந்த கே.சி. வேணுகோபால், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்திக்கு அடுத்த இடத்தில் இருக்கிறார். ஆனால், அடுத்த ஆண்டு கேரளாவில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் தனக்கென ஒரு தலைமை இடத்தைப் பிடிப்பதற்காக, பிஹார் தேர்தலில் உரிய பொறுப்பை ஏற்காமல் விட்டுவிட்டார். தற்போதும் காலம் கடந்துவிடவில்லை. காங்கிரஸ் தலைமை தேர்தல் தோல்வியை ஆராய்ந்து சரியான பாதையை தேர்ந்தெடுக்க வேண்டும்.
தேர்தலில் கருப்புப் பணத்தைச் செலவிடுவது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை தவறாகப் பயன்படுத்துவது, மக்களின் வாழ்வாதார பிரச்சினைகளைப் பற்றி பேசாமல் வகுப்புவாத பிரச்சாரங்களை முன்னெடுத்தது, அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றில் ஈடுபட்டதன் மூலம் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு நிதிஷ் குமார் அரசு, வாக்காளர்களுக்கு ரூ.10,000 வழங்கியது. இந்த உதவித் தொகை மாதம்தோறும் வழங்கப்படும் என பொய் வாக்குறுதியைக் கூறி வாக்காளர்களை ஏமாற்றியது. அதேநேரத்தில், சில பத்தாண்டுகளுக்கு முன்பு இதே போன்ற ஒரு உத்தியை தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த ஒரு கட்சி முன்னெடுத்தபோது அதை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது.” என தெரிவித்துள்ளார்.