“ஈரானைவிட இஸ்ரேல் அச்சுறுத்தலானது" – 200 வருட பழைமையான ஆக்ஸ்போர்ட் யூனியனில் தீர்மானம் நிறைவேற்றம்

பாலஸ்தீனம் மீது இரண்டாண்டுகளாக இஸ்ரேல் போர் நடத்தி வருகிறது. இதில், காசாவில் 69,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர்.

கடந்த அக்டோபரில் தற்காலிகமாகப் போர்நிறுத்தம் கொண்டு வரப்பட்டாலும், காசாவில் இஸ்ரேலியப் படைகளின் வன்முறைகள் தொடர்ந்தபடியே இருக்கின்றன. பாலஸ்தீனியர்களின் உயிரிழப்புகள் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன.

இந்த நிலையில், இங்கிலாந்தின் 202 ஆண்டுகள் பழமையான ஆக்ஸ்போர்டு யூனியன் சொசைட்டி (Oxford Union Society), பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு ஈரானைவிட இஸ்ரேல்தான் பெரும் அச்சுறுத்தல் எனத் தீர்மானம் நிறைவேற்றியருக்கிறது.

Oxford Union Society
Oxford Union Society

நவம்பர் 13-ம் தேதி ஆக்ஸ்போர்டு யூனியன் சொசைட்டியில் இந்தத் தீர்மானத்தின்மீது நடைபெற்ற விவாதத்தில் பாலஸ்தீன முன்னாள் பிரதமர் முகமது ஷ்டய்யே (Mohammad Shtayyeh) உள்ளிட்டோரும், ஐ.நா கண்காணிப்பு இயக்குநர் ஹில்லெல் நியூயர் (Hillel Neuer) உள்ளிட்டோரும் எதிரெதிர் பக்கத்தில் இருந்தனர்.

தீர்மானத்தை ஆதரித்து பாலஸ்தீன முன்னாள் பிரதமர் முகமது ஷ்டய்யே தனது உரையில், “இஸ்ரேல் காலனித்துவ சக்திகளால் நிறுவப்பட்ட ஒரு காலனித்துவ நாடு.

சட்டத்துக்கு அப்பாற்பட்ட நாடாக இஸ்ரேல் செயல்படுகிறது, ஐ.நா தீர்மானங்களை மதிப்பதேயில்லை.

இஸ்ரேல் அரசானது அணு ஆயுதம் ஏந்தியதாகவும், பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இனவெறியை அடிப்படையாகக் கொண்ட காலனித்துவ ஆட்சியின் மையமாகவும் உள்ளது.

இங்கே மிருகத்தனமான ஆக்கிரமிப்பு, குற்றங்கள், இனப்படுகொலை நடக்கிறது. இஸ்ரேல் இப்பகுதியை (பாலஸ்தீனம்) மீண்டும் மீண்டும் மோதல்களுக்குள் இழுத்து வருகிறது.

இஸ்ரேல் ஒரு தீய நாடு, அது தடுத்து நிறுத்தப்படவேண்டும். இஸ்ரேல் இனப்படுகொலை செய்கிறது, காலனித்துவ மனநிலையில் உள்ளது.

பிராந்தியத்தில் ஸ்திரமின்மைக்கு இஸ்ரேல்தான் மிகப்பெரிய காரணம் என்று நாம் அனைவரும் சொல்லவேண்டும்” என்று கூறினார்.

பாலஸ்தீன முன்னாள் பிரதமர் முகமது ஷ்டய்யே (Mohammad Shtayyeh)
பாலஸ்தீன முன்னாள் பிரதமர் முகமது ஷ்டய்யே (Mohammad Shtayyeh)

அவரைத்தொடர்ந்து, இந்தத் தீர்மானத்தை எதிர்த்து உரையாற்றிய ஐ.நா கண்காணிப்பு இயக்குநர் ஹில்லெல் நியூயர், “இஸ்ரேல் ஈரானைவிட பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என்ற கருத்து தவறானது மட்டுமல்லாமல், யதார்த்தத்தில் தலைகீழானது.

பிராந்திய ஸ்திரத்தன்மையானது, போர்களை யார் தொடங்குகிறார்கள் என்பதன் மூலம் அளவிடப்படுகிறதே தவிர, யார் அவற்றை நிறுத்துகிறார்கள் என்பதன் மூலம் அல்ல.

ஐந்து அரபு நாடுகளில் பயங்கரவாத பிரதிநிதிகளுக்கு இஸ்ரேல் ஆயுதம் வழங்குவதில்லை. ஆனால், ஈரானிலுள்ள இஸ்லாமிய ஆட்சி அதைச் செய்கிறது. முழு மத்திய கிழக்கு நாடுகளும் இதனை அறியும்.

அதனால்தான் அரபு நாடுகள் தாங்கள் உயிர்வாழ்வதற்காக இஸ்ரேலை அமைதியாக நம்பியுள்ளன.

ஈரானில் உள்ள இஸ்லாமிய ஆட்சி 170 ட்ரோன்கள், 30 குரூஸ் ஏவுகணைகள் மற்றும் 120-க்கும் மேற்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் இஸ்ரேல் மக்கள் மீது முன்னோடியில்லாத தாக்குதலை நடத்தியது இதற்கு முக்கியமான எடுத்துக்காட்டாகும்.

தாங்கள் உயிர்வாழ்வதற்கு இஸ்ரேல் கூட்டாளி என்றும், ஈரானில் உள்ள இஸ்லாமிய ஆட்சி ஒரு இருத்தலியல் அச்சுறுத்தல் என்றும் அரபு நாடுகள் அறிந்திருக்கின்றன.

ஐ.நா கண்காணிப்பு இயக்குநர் ஹில்லெல் நியூயர் (Hillel Neuer)
ஐ.நா கண்காணிப்பு இயக்குநர் ஹில்லெல் நியூயர் (Hillel Neuer)

ஹமாஸை ஒரு மினி ராணுவமாக ஈரான் மாற்றியுள்ளது. ஈரானிய பயிற்சியுடன் அந்த ஹமாஸ், பாலஸ்தீனியர்களுக்கான எதிர்காலத்தை உருவாக்குவதற்கு பதிலாக, வீடுகள், மருத்துவமனைகள், பள்ளிகளுக்கு அடியில் ஒரு கோட்டையைக் கட்டியது.

அதன் விளைவு, யூதர்கள் மீது ஹோலோகாஸ்டுக்குப் (இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் ஜெர்மனியின் நாஜி படை லட்சக்கணக்கில் யூதர்களை கொன்று குவித்த சம்பவம்) பிறகு அக்டோபர் 7-ம் தேதி (2023) படுகொலை நிகழ்த்தப்பட்டது” என்றார்.

இறுதியில் இருதரப்பு வாதங்களுக்கு பின் நடந்த வாக்கெடுப்பில், தீர்மானத்துக்கு ஆதரவாக 265 வாக்குகளும், எதிராக 113 வாக்குகளும் பதிவாகின.

இதன் மூலம், பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு ஈரானைவிட இஸ்ரேல்தான் பெரும் அச்சுறுத்தல் என்ற தீர்மானத்தை ஆக்ஸ்போர்டு யூனியன் சொசைட்டி நிறைவேற்றியது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.