ராஜ்கோட்,
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க ஏ கிரிக்கெட் அணி இந்தியா ஏ-க்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி ராஜ்கோட்டில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க ஏ அணி இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வெறும் 30.3 ஓவர்களில் 132 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. இந்தியா ஏ தரப்பில் நிஷாந்த் சந்து 4 விக்கெட்டுகளும், ஹர்ஷித் ராணா 3 விக்கெட்டுகளும், பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 133 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்தியா ஏ அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன அபிஷேக் சர்மா – ருதுராஜ் கெய்க்வாட் வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 53 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. அபிஷேக் சர்மா 32 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து கேப்டன் திலக் வர்மா களமிறங்கினார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி மேற்கொண்டு விக்கெட் விழாமல் இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது. கெய்க்வாட் அரைசதம் அடித்து அசத்தினார்.
இதன் மூலம் வெறும் 27.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 135 ரன்கள் அடித்த இந்தியா ஏ 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கெய்க்வாட் 68 ரன்களுடனும், திலக் வர்மா 29 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா ஏ 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. கெய்க்வாட் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி போட்டி 19-ம் தேதி நடைபெற உள்ளது.