ஐபிஎல் 2026ம் ஆண்டுக்கான மினி ஏலத்திற்கு முன்னதாக, அணிகளுக்கு இடையேயான வீரர்கள் பரிமாற்றத்தில் ஒரு முக்கிய நிகழ்வாக, மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் ஆல்-ரவுண்டரான அர்ஜுன் டெண்டுல்கர், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு டிரேட் செய்யப்பட்டுள்ளார். இந்த அணி மாற்றம், அவரது ஐபிஎல் பயணத்தில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கி வைத்துள்ளது. கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜுன், கடந்த இரண்டு சீசன்களாக மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றிருந்தார். அவரது ஐபிஎல் பயணம் 2021-ம் ஆண்டு தொடங்கியது. அப்போது, அவரை மும்பை அணி ரூ.20 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது. இருப்பினும், அந்த ஆண்டு அவருக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.
Add Zee News as a Preferred Source

பெஞ்சில் இருந்த அர்ஜுன் டெண்டுல்கர்!
பின்னர், 2022ம் ஆண்டு நடைபெற்ற மெகா ஏலத்தில், குஜராத் டைட்டன்ஸ் அணியின் போட்டியையும் மீறி, மும்பை இந்தியன்ஸ் அணி அவரை ரூ.30 லட்சத்திற்கு மீண்டும் வாங்கியது. அப்போதும், அவருக்கு அணியில் இடம் கிடைக்காததால், அவரது அறிமுகத்திற்காக ரசிகர்கள் காத்திருந்தனர். நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு பிறகு, 2023ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அர்ஜுன் டெண்டுல்கர் தனது அறிமுக போட்டியில் களமிறங்கினார்.
அந்த தொடரில், அவர் நான்கு போட்டிகளில் விளையாடி, 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பேட்டிங்கில் 13 ரன்கள் எடுத்தார். இடது கை வேகப்பந்து வீச்சாளரான அவர், தனது பந்துவீச்சில் சில சமயங்களில் திறமையை வெளிப்படுத்தினாலும், மும்பை அணியில் ஜஸ்பிரித் பும்ரா, ஹர்டிக் பாண்டியா போன்ற முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்ததால், அவருக்கு தொடர்ச்சியான வாய்ப்புகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
லக்னோவில் ஒரு புதிய தொடக்கம்
இந்த சூழலில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு அவர் மாறியிருப்பது, அவரது கிரிக்கெட் வாழ்க்கைக்கு ஒரு புத்துயிர் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய பயிற்சியாளர்கள், புதிய அணி வீரர்கள் என ஒரு முற்றிலும் மாறுபட்ட சூழல், அவரது திறமையை முழுமையாக வெளிக்கொணர ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும் என்று கருதப்படுகிறது.
சம்பள விவரம் என்ன?
இந்த அணி மாற்றத்தால் அர்ஜுன் டெண்டுல்கரின் சம்பளத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2022 மெகா ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி அவருக்கு வழங்கிய அதே ரூ.30 லட்சம் சம்பளத்தையே, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் 2026 சீசனுக்காக தக்கவைத்துள்ளது. பவர்பிளேயில் பந்துவீசும் திறன் மற்றும் கீழ் வரிசையில் பேட்டிங் செய்யும் ஆற்றல் கொண்ட ஒரு இந்திய ஆல்-ரவுண்டர், வெறும் ரூ.30 லட்சம் என்ற குறைந்த விலையில் கிடைத்திருப்பது லக்னோ அணிக்கு ஒரு சிறந்த தேர்வாக கருதப்படுகிறது. இந்த புதிய வாய்ப்பை அர்ஜுன் டெண்டுல்கர் எப்படி பயன்படுத்தி கொள்கிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
About the Author
RK Spark