புதுடெல்லி,
டெல்லியின் முக்கிய பகுதியான செங்கோட்டை அருகே கடந்த 10-ந் தேதி இரவு கார் வெடித்து சிதறிய சம்பவத்தில் 14 பேர் பலியானார்கள். இது திட்டமிட்ட பயங்கரவாத செயல் என கண்டறியப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) மற்றும் தேசிய பாதுகாப்பு படையினர் விசாரித்து வருகின்றனர்.
இந்த தாக்குதலை நிகழ்த்தியது டாக்டர் உமர் முகமது என்ற பயங்கரவாதி என கண்டறியப்பட்டது. உமர் உடல் சிதறி இறந்தது டி.என்.ஏ. பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் காஷ்மீர் டாக்டர் முசாமில், அரியானா மாநிலம் பரீதாபாத்தில் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். பெண் டாக்டர் ஷாகீன், லக்னோவில் கைது செய்யப்பட்டார். கார் வெடிப்பு சம்பவம் எதிரொலியாக, அல் பலா பல்கலைக்கழகத்தின் உறுப்பினர் அங்கீகாரத்திற்கு இந்திய பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு தற்காலிக தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது.
இந்தநிலையில், அரியானாவின் பரீதாபாத் நகரில் வடக்கு மண்டல கவுன்சிலின் 32வது கூட்டம் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் நடைபெற்றது.வடக்கு மண்டல கவுன்சில் ஆனது அரியானா, இமாசலபிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், டெல்லி, ஜம்மு-காஷ்மீர், லடாக் மற்றும் சண்டிகர் ஆகிய மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கியது. இந்த கூட்டத்தில் மத்திய அரசு, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
ஆலோசனைக் கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது:
பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், பயங்கரவாதத்தை அதன் வேர்களிலிருந்து ஒழிப்பதில் அரசு உறுதியாக உள்ளது. டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தில், குற்றவாளிகள் அடையாளம் காணப்படுவார்கள். மிகக் கடுமையான தண்டனையை எதிர்கொள்ள நீதித்துறையின் முன் ஆஜர்படுத்தப்படுவார்கள். டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தில் குற்றவாளிகளை நரகத்தில் இருந்தாலும் அரசு வேட்டையாடும். டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்வோம்.
இவ்வாறு அமித்ஷா பேசினார்.