டாக்கா: கடந்த ஆண்டு மாணவர்கள் தலைமையிலான போராட்டங்களை ஒடுக்கியபோது ஏற்பட்ட வன்முறை மற்றும் உயிரிழப்பு குற்றங்களுக்காக வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு அந்நாட்டின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் மரண தண்டனை விதித்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை – ஆகஸ்ட் மாதங்களில் அரசுக்கு எதிராக நடந்த போராட்டங்களை அரசு தீவிரமாக ஒடுக்கியது. இதன் காரணமாக சுமார் 1,400 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து பதவி நீக்கம் செய்யப்பட்டு தப்பியோடிய ஷேக் ஹசீனா (78) இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
கடந்த ஆண்டு மாணவர்கள் தலைமையிலான போராட்டத்தின் மீது கொடிய ஒடுக்குமுறைக்கு உத்தரவிட்டதாக ஷேக் ஹசீனா மீது மனிதகுலத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு பல மாதங்களாக விசாரணை நடந்தது.
இந்நிலையில், நீதிபதி கோலம் மோர்டுசா மொசும்தார் தலைமையிலான சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் அவரை குற்றவாளி என அறிவித்தது. தொடர்ந்து நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்களின் மரணத்துக்கு வழிவகுத்த கொடிய அடக்குமுறைக்கு உத்தரவிட்ட குற்றச்சாட்டில் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் உள்துறை அமைச்சர் அசாதுஸ்மான் கான் கமலும் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட பின்னர், அவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் ஆஜராகி குற்றத்தை ஒப்புக்கொண்ட முன்னாள் காவல் துறைத் தலைவர் சவுத்ரி அப்துல்லா அல்-மாமுனுக்கு, ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
ஷேக் ஹசீனா மூன்று குற்றச்சாட்டுகளில் குற்றவாளி எனக் கண்டறியப்பட்டார். இதில் வன்முறையை தூண்டுதல், கொலை செய்ய உத்தரவு மற்றும் அட்டூழியங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்காதது ஆகியவை அடங்கும் என்று டாக்காவில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி கோலம் மோர்டுசா மொசும்தர் தெரிவித்தார். மேலும், “அவருக்கு ஒரே ஒரு தண்டனையை மட்டுமே விதிக்க முடிவு செய்துள்ளோம், அதாவது மரண தண்டனை.” என்றார்.
பிப்ரவரி தொடக்கத்தில் வங்கதேசத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் இந்தத் தீர்ப்பு வந்துள்ளது. இந்தத் தேர்தலில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஷேக் ஹசீனா மற்றும் மீதான தீர்ப்பை சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் இன்று அறிவிப்பதற்கு முன்னதாக, வங்கதேசம் முழுவதும் பதற்றமான பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், தன் மீதான தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த ஷேக் ஹசீனா, “எனக்கு எதிராக அறிவிக்கப்பட்ட தீர்ப்புகள், ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்படாத அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட ஒரு மோசடி தீர்ப்பாயத்தால் வழங்கப்பட்டுள்ளன. இந்த தீர்ப்புகள் பாரபட்சமானவை மற்றும் அரசியல் ரீதியாக உள்நோக்கம் கொண்டவை.
கடந்த ஆண்டு போராட்டம் நடந்தபோது நாங்கள் கட்டுப்பாட்டை இழந்தோம். எனவே அதனை குடிமக்கள் மீதான முன்கூட்டிய திட்டமிட்ட தாக்குதல் என்று வகைப்படுத்த முடியாது.” என்று வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கூறினார்.