கொழும்பு,
நியூசிலாந்து நாட்டை சேர்ந்த பெண் சுற்றுலா பயணி ஒருவர், இலங்கையில் தனியாக சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இலங்கையின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று அதை சமூக வலைதளத்தில் வீடியோவாக பதிவிட்டு வருகிறார். இவ்வாறு 3 நாட்கள் அவரது சுற்றுலா பயணம் நல்லபடியாக சென்று கொண்டிருந்தது. ஆனால் நான்காவது நாள் அவருக்கு ஒரு மோசமான அனுபவம் ஏற்பட்டது.
இது குறித்து அப்பெண் வீடியோ ஒன்றை வெளியிட்டு பேசியுள்ளார். அதில், “நான் ஆட்டோவில் பயணம் செய்து கொண்டிருந்தேன். அப்போது ஒரு நபர் இருசக்கர வாகனத்தில் என்னை பின்தொடர்ந்து வந்து கொண்டிருந்தார். நான் சாலையோரம் இருந்த கடையில் ஏதாவது சாப்பிடலாம் என்று ஆட்டோவை நிறுத்த சொன்னேன்.
அப்போது என்னை பின்தொடர்ந்து வந்த நபர், திடீரென ஆட்டோவிற்கு அருகில் வந்து என்னிடம் பேசத் தொடங்கினார். முதலில் அவர் நட்பாக பேசுவதுபோல் தெரிந்தது. ஆனால் நான் எங்கு தங்கியிருக்கிறேன் என்று அவர் கேட்டார். அவர் எதற்காக இதையெல்லாம் கேட்கிறார் என்பது எனக்கு புரிந்தது. பின்னர் அவர் என்னை பாலியல் உறவுக்கு அழைத்தார். அதோடு, எனக்கு முன்பாகவே ஆபாச செயலில் ஈடுபட்டார்.
இந்த சம்பவம் எனது சுற்றுலாவை கெடுப்பதை நான் அனுமதிக்க மாட்டேன். ஆனால் எனது மனஉறுதியை இந்த சம்பவம் சற்று குறைத்துவிட்டது. தனியாக பயணம் செய்யும் பெண்கள் சந்திக்கும் சவால் இது. துரதிருஷ்டவசமாக இதுதான் நமது எதார்த்த நிலை. அதே சமயம், இந்த ஒற்றை சம்பவம் முழு இலங்கையை பிரதிபலிக்காது. நான் இங்கு சந்தித்த உள்ளூர் மக்கள் மிகவும் அன்பானவர்கள்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இது காவல்துறை அதிகாரிகள் கவனத்திற்கு சென்ற நிலையில், அந்த சுற்றுலா பயணியின் வீடியோவில் பதிவாகி இருந்த 23 வயது வாலிபரை போலீசார் தேடிப்பிடித்து அதிரடியாக கைது செய்தனர். இதற்கிடையில், இந்த சம்பவத்திற்கு இலங்கை மக்கள் சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்களை பதிவிட்டு, பெண் சுற்றுலா பயணிக்கு தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.