தோஹா,
வளர்ந்து வரும் நட்சத்திரங்களுக்கான (ரைசிங் ஸ்டார்) ஆசிய கோப்பை டி20 போட்டி கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பரம எதிரிகளான இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 19 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 136 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் 13.2 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 137 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்தியாவை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றிபெற்றது. அதிகபட்சமாக மாஸ் சதகத் 79 ரன்கள் அடித்தார்.
இந்த ஆட்டத்தில் இந்திய வீரர் சுயாஷ் சர்மா வீசிய பந்தை எதிர்கொண்ட பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் மாஸ் சதகத் அதனை சிக்சரை நோக்கி அடித்தார். அதனை எல்லைக்கோட்டில் பீல்டிங் செய்த நேஹல் வதேரா மற்றும் நமன் தீர் ஆகியோர் இணைந்து ஒரு அற்புதமான கேட்சைப் பிடித்தனர்.
முதலில் பந்தை பிடித்த வதேரா, பவுண்டரி லைனை தாண்டுவதற்கு முன் உள்ளே வீசினார். அதனை மற்றொரு பீல்டரான நமன் திர் பிடித்தார். இது கேட்ச் என்று இந்திய வீரர்கள் அனைவரும் நினைத்து கொண்டாடினர். பேட்ஸ்மேனும் அவுட் என்று நினைத்து பெவிலியன் திரும்பினார்.
ஆனால் 3-வது நடுவர் இதனை பல கோணங்களில் ஆராய்ந்து நாட் அவுட் என்று அறிவித்தார். இதனால் அதிருப்தி அடைந்த இந்திய வீரர்கள் கள நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது சர்ச்சையை கிளப்பியது. இருப்பினும் நடுவர்கள் இந்திய வீரர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த கண்டத்தில் இருந்து தப்பித்த சதகத் அதிரடியாக விளையாடி பாகிஸ்தானை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.