ரஷியாவுடன் வர்த்தகம் செய்யும் எந்த நாடும் கடுமையாக தண்டிக்கப்படும் – டிரம்ப் மிரட்டல்

வாஷிங்டன்,

அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து கடுமையான கொள்கைகளை மேற்கொண்டு வருகிறார். அமெரிக்கா முதலில் என்ற கொள்கையை முன்வைத்து பிற நாடுகளுக்கு பரஸ்பர வரி விதித்தார். மேலும் உலக நாடுகளிடையே நிலவி வரும் மோதல்களை நிறுத்துவதாக கூறி வர்த்தக தடை, வரிவிதிப்பு என மிரட்டி வருகிறார்.

2022-ம் ஆண்டு உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததை தொடர்ந்து அந்த நாட்டின் மீது ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடைவிதித்தன. குறிப்பாக, ரஷியாவின் மிகப்பெரிய வருவாய் ஆதாரமாக உள்ள கச்சா எண்ணெய் வர்த்தகத்தை முடக்குவதற்காக பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டன. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இதற்கு ஒருபடி மேல் ஏறி ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் மீது அதிகபட்ச வரிவிதித்தார்.

ஏற்கனவே இந்தியா மீது 25 சதவீதம் வரிவிதித்தநிலையில் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதாக கூறி கூடுதலாக 25 சதவீதம் என உச்சபட்சமாக 50 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்பட்டது. இதனால் இந்தியாவின் சிறு-குறு-நடுத்தர தொழில்கள் பெரிதும் பாதிக்கப்பட்டது.

இந்தநிலையில் ரஷியாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் எந்த நாடாக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்படும் என டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அவர், “குடியரசு கட்சி எம்.பி.க்கள் செனட் சபையில் பொருளாதார தடைகளுக்கான மசோதாக்களை தாக்கல் செய்து கொண்டே இருப்பார்கள். இதுதான் அவர்களுடைய பணி. ரஷியாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் எந்த நாட்டின் மீதும் அமெரிக்கா பொருளாதார தடைகளை மேற்கொள்ளும்.

இதில் பாரபட்சம் இல்லை. அது எந்த நாடாக இருந்தாலும் சரி. இந்த பட்டியலில் ஈரானையும் சேர்க்க சொல்லியுள்ளேன்” என்றார். குடியரசு கட்சி செனட் சபை எம்.பி. லின்ட்லே கிராகம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் ரஷிய எண்ணெயை இறக்குமதி செய்யும் நாடுகள் மீது 500 சதவீதம் இறக்குமதி வரிவிதிக்கும் வகையில் புதிய மசோதாவை தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கு செனட் சபையில் 85 எம்.பி.க்கள் ஆதரவளித்திருந்தனர். மீண்டும் இதற்கான வாக்களிப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து லின்ட்லே கூறுகையில், “ஜனாபதிபதி டிரம்பும் அவருடைய குழுவும் ரஷியாவுக்கு எதிராக இரும்புக்கரம் கொண்டு போரிடுகிறார்கள். இதன்மூலம் ரத்த ஆறு ஓடுவது நிறுத்தப்படும். புதினின் போர் எந்திரத்திற்கு கச்சா எண்ணெய் வாங்கி நிதியளிக்கும் சீனா, இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகள் மீது விரைவில் சம்மட்டி அடி கொடுக்கப்படும்” என்றார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.