இன்று (நவ 18) மாலை முதல் சமூக வலைத்தளமான எக்ஸ் மற்றும் ஜெமினி, சாட் ஜிபிடி, க்ளாட் ஏஐ போன்ற ஏஐ தளங்களுடன் மேலும் சில இணையதளப் பக்கங்களும் முடங்கியிருக்கின்றன.
அவற்றின் பயனர்களுக்கு Cloudflare Error என்ற பதிலை அளிக்கின்றன. கிளவுட்ஃப்ளேர் நிறுவனமும் தாங்கள் தொழில்நுட்ப கோளாறுகளைச் சந்தித்து வருவதை உறுதி செய்திருக்கிறது.

அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “பல வாடிக்கையாளர்களைப் பாதிக்கும் ஒரு சிக்கலை கிளவுட்ஃப்ளேர் அறிந்திருக்கிறது, மேலும் அது அதை ஆராய்ந்து வருகிறது. பரவலான ‘500 பிழைகள் கண்டறியப்பட்டுள்ளன’, கிளவுட்ஃப்ளேர் டேஷ்போர்டு மற்றும் API ஆகியவையும் வீழ்ந்துள்ளன.
முழு தாக்கத்தையும் புரிந்துகொண்டு இந்தச் சிக்கலைத் தணிக்க நாங்கள் பணியாற்றி வருகிறோம். விரைவில் கூடுதல் அப்டேட்கள் வரும்” எனக் கூறியுள்ளனர்.
X, Spotify, OpenAI, Amazon Web Services, Canva, Letterboxd, Sage, PayPal உள்ளிட்ட பல நிறுவனங்களின் வெப்சைட்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
Cloudflare என்பது என்ன?
கிளவுட்ஃப்ளேர் என்பது ஒரு மிகப் பெரிய இணையதள இயக்க நிறுவனம். பல நிறுவனங்கள் தங்கள் இணையதளத்தை வேகமாக வைத்திருக்கவும், வெளிப்புறத் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கவும் இதனைச் சார்ந்துள்ளன. வலைத்தளங்களுக்கும் அவற்றை அணுக முயற்சிக்கும் மக்களுக்கும் இடையில் ஒரு நடுத்தர அடுக்காக இந்தத் தளம் செயல்படுகிறது.

இந்த நிறுவனம் பல இணையதளங்களுக்குச் சேவை வழங்குவதால் இதில் ஏற்படும் பாதிப்பு ஒட்டுமொத்த இணையத்திலும் கணிசமானதாக இருக்கும்.
இதுபோன்ற பாதிப்புகள் நடப்பது இது முதன்முறை அல்ல. கடந்த மாதத்தில் மட்டும், மைக்ரோசாப்ட் அஸூர் மற்றும் அமேசான் வலை சேவைகள் (AWS) ஆகியவற்றில், இரண்டு பெரிய செயலிழப்புகள் ஏற்பட்டன. இதனால் பல வலைத்தளங்கள் முடங்கின. பின்னர் சரிசெய்யப்பட்டன.
அதற்கு முன்பு, ஜூன் மாதத்தில் கூகிள் கிளவுட் செயலிழந்ததால் கூகிள் மீட், டிஸ்கார்ட் மற்றும் ஸ்பாடிஃபை போன்ற பிரபலமான பயன்பாடுகள் பாதிக்கப்பட்டன.
தற்போது கிளவுட்ஃபேர் செயலிழப்பு ஏற்பட நெட்வர்க் பிழைகள் (Bugs), சர்வரில் அதீத சுமை, கட்டமைப்பு பிழைகள் அல்லது சைபர் தாக்குதல்கள் காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகின்றன. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் இல்லை!