இந்திய கிரிக்கெட் வரலாற்றில், கேப்டன் கூல் என்று அன்புடன் அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனியின் பெயர் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டது. இந்திய அணிக்கு அனைத்து விதமான ஐசிசி கோப்பைகளையும் வென்று தந்த ஒரே கேப்டன் என்ற பெருமைக்குரியவர். களத்தில் ஒரு வீரராகவும், தலைவராகவும் எண்ணற்ற சாதனைகளை படைத்த தோனி, களத்திற்கு வெளியே ஒரு மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ளார். 2025-ம் ஆண்டு நிலவரப்படி, அவரது நிகர சொத்து மதிப்பு சுமார் ரூ.1,000 கோடியை தொடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
Add Zee News as a Preferred Source

வருமானத்தின் முக்கிய ஆதாரங்கள்
ஐபிஎல் சம்பளம்: சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும், ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தொடர்ந்து விளையாடி வருகிறார். 2025-ம் ஆண்டு தொடருக்காக, சிஎஸ்கே அணி அவரை ரூ.4 கோடிக்குத் தக்கவைத்து கொண்டது. இது தற்போதைய சம்பளமாக இருந்தாலும், ஒரு காலகட்டத்தில் ஒரு சீசனுக்கு ரூ.15 கோடி வரை சம்பளமாக பெற்றவர் தோனி என்பது குறிப்பிடத்தக்கது.
பிராண்ட் விளம்பரங்கள்: தோனியின் வருமானத்தில் அதிக பங்களிப்பை வழங்குவது பிராண்ட் விளம்பரங்கள் தான். அவர் இன்றும் பல முன்னணி நிறுவனங்களின் பிரதான முகமாக விளங்குகிறார். இதன் மூலம், ஆண்டுக்கு சுமார் ரூ.100 கோடி வரை அவர் வருமானம் ஈட்டுவதாக அறிக்கைகள் கூறுகின்றன.
தொழில் முதலீடுகள்: தோனி ஒரு சிறந்த விளையாட்டு வீரர் மட்டுமல்ல, ஒரு கூர்மையான தொழில்முனைவோரும் கூட. ராஞ்சியில் உள்ள பிரம்மாண்டமான பண்ணை வீடு, புனே மற்றும் மும்பையில் உள்ள சொத்துக்கள் என ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்துள்ளார்.
மேலும், ‘சென்னையின் எஃப்சி’ கால்பந்து அணியின் இணை உரிமையாளராகவும், ‘செவன்’ (SEVEN) என்ற விளையாட்டு ஆடை பிராண்டின் உரிமையாளராகவும் உள்ளார். இவை தவிர, பல்வேறு புதிய தொழில் முயற்சிகளிலும் அவர் கால் பதித்துள்ளார்.
அரசின் அங்கீகாரம் மற்றும் ஓய்வூதியம்
தோனியின் விளையாட்டுத் திறமைக்கு மதிப்பளிக்கும் வகையில், இந்திய ராணுவம் அவருக்கு லெப்டினன்ட் கர்னல் என்ற கௌரவ பதவியை வழங்கியுள்ளது. மேலும் பத்ம பூஷன், பத்மஸ்ரீ, ராஜீவ் காந்தி கேல் ரத்னா எனப் பல உயரிய விருதுகளையும் பெற்றுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதை தொடர்ந்து, பிசிசிஐ அவருக்கு மாதந்தோறும் ரூ.70,000 ஓய்வூதியமாக வழங்கி வருகிறது. கிரிக்கெட் உலகில் ஒரு நட்சத்திரமாக ஜொலித்த தோனி, தனது கடின உழைப்பாலும், சரியான திட்டமிடலாலும், நிதித்துறையிலும் ஒரு வெற்றிகரமான ராஜாவாக திகழ்கிறார்.
About the Author
RK Spark