ஜெய்ப்பூர்,
ராஜஸ்தானில் அமெரிக்க வாழ் இந்திய தொழில் அதிபரின் மகள் திருமணம் நடக்கிறது. இதில் டிரம்ப் மகன் மற்றும் பிரபல நடிகர், நடிகைகள் பங்கேற்க உள்ளனர்.
அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராஜூ ராமலிங்கம், பிரபலமான தொழில் அதிபராக உள்ளார். அவரது மகளின் திருமணம், இந்தியாவின பூர்வீக பகுதியான ராஜஸ்தானில் நடைபெற உள்ளது. அவரது மகள் நேத்ரா மந்தேனா, வெளிநாட்டில் வசிக்கும் இந்தியரான வம்சி கதிராஜுவை கரம்பிடிக்க இருக்கிறார்.
இவர்களின் திருமண கொண்டாட்டங்கள் நேற்று முன்தினமே தொடங்கிவிட்டது. வருகிற 24-ந் தேதி வரை விழா நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இதையடுத்து அங்கு ஏரிகளின் நகரம் என புகழப்படும் உதய்பூரில் திருமண ஏற்பாடுகள் களைகட்டி உள்ளன.
இந்த திருமண விழாவில் சினிமா பிரபலங்களான ஹிருத்திக் ரோஷன், ரன்பீர் கபூர், நடிகை ஜெனிபர் லோபஸ் உள்ளிட்ட பல பாலிவுட் நடிகர்கள்-நடிகைகள் பங்கேற்கிறார்கள்.
மேலும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் மகன் ஜூனியர் டிரம்பும் குடும்பத்தினருடன் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது. முக்கிய பிரமுகர்கள் 600 பேர் விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.
திருமண விழாவுக்காக அங்குள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்று அரண்மனை போல ஆடம்பரமாக அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது. தடபுடல் விருந்து, கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டு உள்ளன.