பெர்த்,
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் பங்கேற்றுள்ளது. இதன் முதலாவது டெஸ்ட் போட்டி உலகின் அதிவேக ஆடுகளமான பெர்த்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 32.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த நிலையில் முதல் இன்னிங்சில் 172 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ஹாரி புரூக் 52 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலிய தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 7 விக்கெட்டுகளை அள்ளினார்.
பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 132 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக அலெக்ஸ் கேரி 26 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் 40 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி வெறும் 34.4 ஓவர்களில் 164 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு 205 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இங்கிலாந்து தரப்பில் கஸ் அட்கின்சன் 37 ரன்களும், ஆலி போப் 33 ரன்களும் அடித்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்காட் போலண்ட் 4 விக்கெட்டுகளும், ஸ்டார்க் மற்றும் பிரெண்டன் டாகெட் தலா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 205 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் ஆன டிராவிஸ் ஹெட் அதிரடியாக ஆடி வெற்றியை தேடி கொடுத்தார். 2-வது இன்னிங்சில் வெறும் 28. 2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த ஆஸ்திரேலியா 205 ரன்கள் அடித்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்து பந்துவீச்சை வெளுத்து வாங்கிய டிராவிஸ் ஹெட் 123 ரன்கள் குவித்தார். இந்த போட்டியில் மொத்தம் 10 விக்கெட்டுகள் வீழ்த்திய ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
இந்நிலையில் இந்த வெற்றிக்கு பிறகு ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் அளித்த பேட்டியில், “தொடரை வெற்றியோடு தொடங்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இது போன்று 2 நாளில் முடியும்போது அதில் சரியான இடத்தில் இருப்பதை விரும்புகிறோம். டிராவிஸ் ஹெட்டின் இன்னிங்சை உற்சாகமாக பார்த்து ரசித்தோம். அவரது சில ஷாட்டுகள் பிரமாதம். சில நேரம் பந்து சரியாக கிளிக் ஆகாத போதிலும் இடைவெளியில் ஓடியது. எல்லாமே அவருக்குரிய நாளாக அமைந்தது.
மிட்செல் ஸ்டார்க்கின் பந்து வீச்சு நம்ப முடியாத அளவுக்கு சிறப்பாக இருந்தது. மூன்று முன்னணி பவுலர்களில் 2 பேர் காயத்தால் இல்லை. அதனால் பொறுப்பை எடுத்துக் கொண்ட அவர் மிகவும் நேர்த்தியாக பந்து வீசினார். ஸ்காட் போலன்டின் பந்து வீச்சும் அபாரமாக இருந்தது. அடுத்த டெஸ்டுக்கு கேப்டன் கம்மின்ஸ் திரும்புவார் என நம்புகிறேன்” என்று கூறினார்.