பாலிவுட்டில் தனுஷ் நடித்திருக்கும் ‘தேரே இஷ்க் மெயின்’ திரைப்படம் இம்மாதம் 28-ம் தேதி திரைக்கு வருகிறது.
கிருத்தி சனோன் கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தை ‘ராஞ்சனா’, ‘அத்ராங்கி ரே’ படங்களை இயக்கிய ஆனந்த் எல் ராய் இயக்கியிருக்கிறார்.

ரிலீஸையொட்டி படக்குழுவினர் ப்ரோமோஷனில் பரபரப்பாக ஈடுபட்டு வருகிறார்கள்.
சமீபத்திய ப்ரோமோஷன் நிகழ்வு ஒன்றில் இயக்குநர் ஆனந்த் எல் ராய் தன்னை இப்படியான காதல் தோல்வி கதாபாத்திரங்களுக்கு தேர்வு செய்வது குறித்து ஜாலியாக பேசியிருக்கிறார் தனுஷ். அந்தக் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த நிகழ்வில் தனுஷ், “நான் என் இயக்குநரிடம் ‘ஏன் என்னை இப்படியான காதல் தோல்வியைச் சந்திக்கும் கதாபாத்திரங்களுக்கு தேர்வு செய்கிறீர்கள்’ எனக் கேட்டேன். அவர் ‘உங்களுக்கு லவ் ஃபெயிலியர் முகம் இருக்கிறது’ என்றார்.
அன்று நான் என் வீட்டிற்குச் சென்றதும் என் முகத்தை கண்ணாடியில் பார்த்தேன். இயக்குநர் சொன்னதை நான் பாராட்டாக எடுத்துக்கொண்டேன். ஆனால், அப்படியான கதாபாத்திரங்களில் நடிப்பது சவாலான விஷயம்.

‘ராஞ்சனா’ தொடங்கி இப்படம் வரை அந்த சவாலான விஷயம் இருந்தது. ‘ராஞ்சனா’ படத்தில் அது சாதாரணமான கதாபாத்திரமாகத் தெரியலாம். ஆனால், அப்படி கிடையாது. அந்தக் கதாபாத்திரத்தில் நடிப்பது கடினமானது.
கொஞ்சம் தவறினாலும் உங்களுக்கு குந்தன் கதாபாத்திரம் பிடிக்காமல் போய்விடும். அதுபோல, இப்படத்தின் ஷங்கர் கதாபாத்திரத்திற்கும் சில சவால்கள் இருந்தன. படம் பார்க்கும்போது அந்தக் கதாபாத்திரம் பற்றி உங்களுக்கு தெரியவரும்.” என்றார்.