Why Hardik Pandya not included in india – South Africa ODI: இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே தற்போது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டி 14ஆம் தேதி தொடங்கி 16ஆம் தேதி முடிவடைந்த நிலையில், தற்போது கவுகாத்தியில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த தொடர் முடிவடைந்ததும் இரு அணிகளுக்கும் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற இருக்கிறது. இத்தொடர் இம்மாதம் இறுதியில் 30ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 06ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
Add Zee News as a Preferred Source
இந்திய அணி அறிவிப்பு
இந்த சூழலில், இத்தொடருக்கான இந்திய அணியை நேற்று (நவம்பர் 23) பிசிசிஐ அறிவித்தது. இத்தொடரில் காயம் காரணமாக கேப்டன் சுப்மன் கில் மற்றும் துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் விலகி உள்ளதால், கேப்டனாக கே.எல். ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், அணியில் பல மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஒருநாள் போட்டியில் ரிஷப் பண்ட் இடம் பிடித்துள்ளார். அதேபோல் திலக் வர்மா, ருதுராஜ் கெய்க்வாட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஹர்திக் பாண்டியா இடம் பெறாதது ஏன்?
சமீபமாக இந்திய அணியில் தொடர்ந்து இடம் பிடித்து வந்த அக்சர் படேலுக்கு இத்தொடரில் இடம் கிடைக்கவில்லை. மேலும், சில குறிப்பிட்ட வீரர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. குறிப்பாக முக்கிய ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியா இடம் பிடிக்காதது ரசிகர்கள் இடையே பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. அவருக்கு பதிலாக அணியில் நிதீஷ் குமார் ரெட்டிக்கு வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், ஹர்திக் பாண்டியா ஏன் இந்த ஒருநாள் தொடரில் இடம் பெறவில்லை? அவருக்கு உடல் தகுதி இல்லையா? காயம் ஏதேனும் காயம் ஏற்பட்டிருக்கிறதா? அல்லது அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டிருக்கிறதா? என்பது குறித்துதற்போது பிசிசிஐ தெளிவான தகவலை வழங்கி இருக்கிறது.
டி20 தொடரில் நிச்சயம் இருப்பார்
பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹர்திக் பாண்டியா ஒருநாள் தொடரில் இடம்பிடிக்கவில்லை என்றாலும் அவர் நிச்சயம் டி20 தொடரில் இடம் பிடிப்பார். அதேபோல், அவர் ஒருநாள் தொடரில் இருந்து நீக்கப்பட்ட காரணம் என்னவென்றால், அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பை தொடரில் ஹர்திக் பாண்டியா மிகவும் முக்கியமான ஒரு வீரர். எனவே அதுவரை ஹர்திக் பாண்டியாவை பாதுகாப்பாக பார்த்துக்கொள்வது அவசியம். அதனாலேயே ஒருநாள் தொடரில் இருந்து அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மற்றபடி அவருக்கு காயம் ஏதும் இல்லை. அவர் நல்ல உடதகுதியுடன் உள்ளார் என பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது. தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடர், ஒருநாள் தொடர் முடிந்த பின்னர் டிசம்பர் 09ஆம் தேதி தொடங்கி 19ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி: கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர் & கேப்டன்), ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, திலக் வர்மா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ராணா, ருதுராஜ் கெய்க்வாட், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், டிஹ்ருவ் ஜுரேல்.
About the Author
R Balaji