இந்தியா vs தென்னாப்பிரிக்கா, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது.
கொல்கத்தா ஈடன் கார்டனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 124 ரன்கள் டார்கெட்டைக் கூட அடிக்க முடியாமல் இந்தியா படுதோல்வி அடைந்தது.
அதுமட்டுமல்லாமல் போட்டியும் 3-வது நாளிலேயே முடிவுக்கு வந்தது. குறிப்பாக இரண்டாவது இன்னிங்ஸில் சுழற்பந்துவீச்சாளர்கள் மட்டுமே 14 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதனால், பிட்ச் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.

இத்தகைய சூழலில் நவம்பர் 22-ம் தேதி கவுகாத்தியில் கடைசி டெஸ்ட் போட்டி தொடங்கியது.
25 ஆண்டுகளாக (கடைசியாக 1999-2000ல் இந்தியாவில் டெஸ்ட் தொடரை வென்றது தென்னாப்பிரிக்கா) சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவிடம் டெஸ்ட் தொடரை இழக்காத இந்தியா, அந்த லெகஸியை விட்டுக்கொடுக்கக் கூடாது என்ற கட்டாயத்தோடு, இப்போட்டியில் வெற்றிபெற்று தொடரை சமன் செய்யும் நெருக்கடியில் ரிஷப் பண்ட் தலைமையில் களமிறங்கியது.
இந்தியாவுக்கு மட்டும் பொய்யாகிப் போன கணிப்பு
டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து இறங்கிய தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 489 ரன்கள் அடித்து ஆல் அவுட் ஆனது. இந்திய வம்சாவளி தமிழர் சேனுரான் முத்துசாமி தனது சர்வதேச கரியரின் முதல் சதத்தை இப்போட்டியில் அடித்தார்.
முதல் டெஸ்ட்டில் இரண்டு அணிகளுமே ஒரு இன்னிங்ஸில் கூட 200 ரன்கள் அடிக்காத நிலையில், இப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா 489 அடித்ததால் பிட்ச் நல்ல பேட்டிங் ட்ராக்காகத் தெரிந்தது.

ஆனால், அந்தக் கணிப்பு இந்தியாவுக்கு மட்டும் பொய்யாகிப் போனது. 201 ரன்களில் இந்தியா ஆல் அவுட். மார்கோ யான்சென் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இந்திய அணியில் அதிகபட்சமாக சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் 134 பந்துகள் எதிர்கொண்டார். 288 ரன்கள் முன்னிலையில் இருந்தபோதும் இந்தியாவுக்கு தென்னாப்பிரிக்கா ஃபாலோ-ஆன் தராமல் தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது.
இந்திய பேட்ஸ்மேன்கள் திணறிய அதே ட்ராக்கில் தென்னாப்பிரிக்கா பேட்ஸ்மேன்கள் அசால்ட்டாக ரன்கள் குவிக்கத் தொடங்கினர்.
நான்காம் நாளான இன்று சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட டிரிஸ்டன் ஸ்டப்ஸ் துரதிர்ஷ்டவசமாக 94 ரன்களில் அவுட்டானதும் தென்னாபிரிக்கா 260 ரன்னில் இன்னிங்ஸை டிக்ளேர் செய்து இந்தியாவுக்கு 549 ரன்களை டார்கெட்டாக நிர்ணயித்தது.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே வெற்றிகரமாக சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச டார்கெட் 418 தான். அதுவும் 2003-ல் ஆஸ்திரேலியாவுக்கெதிராக வெஸ்ட் இண்டீஸ் சேஸ் செய்தது.
அதேபோல், டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றிகரமாக சேஸ் செய்த டார்கெட் 406. அதுவும் 1976-ல் வெஸ்ட் இண்டீஸுக்கெதிராக அந்நாட்டு மண்ணில்.
சொந்த மண்ணில் இந்தியாவின் வெற்றிகரமாக சேஸிங் 2008-ல் சென்னை சேப்பாக்கத்தில் இங்கிலாந்துக்கெதிராக அடிக்கப்பட்ட 387 டார்கெட்தான்.

ஆசிய மண்ணில் இதுவரை எந்தவொரு அணியும் 400+ ரன்கள் டார்கெட்டை சேஸ் செய்ததில்லை. அதிகபட்சமாக 2021-ல் வங்காளதேசத்தில் 395 ரன்கள் டார்கெட்டை வெஸ்ட் இண்டீஸ் சேஸ் செய்தது.
எனவே, 549 ரன்கள் என்ற டார்கெட்டை எட்டுவது இந்தியாவுக்கு மிக மிகக் கடினமான ஒன்று.
இதற்கு முன்பு 2004-ல் நாக்பூர் டெஸ்டில் ஆஸ்திரேலியா 504 ரன்களை இந்தியாவுக்கு டார்கெட்டாக நிர்ணயித்தது. அப்போட்டியில் 342 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்றது.
வரலாறு படைக்குமா அல்லது வரலாற்றுத் தோல்வியடையுமா?
இப்போது இந்திய மண்ணில் இரண்டாவது முறையாக 500 ரன்களுக்கு மேல் இந்தியாவுக்கு டார்கெட் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
இப்போதே நான்காம் நாள் முடிவில் 27 ரன்களுக்கு ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல் ஆகிய இரண்டு முக்கிய விக்கெட்டுகளை இந்தியா இழந்துவிட்டது.
இரண்டாவது விக்கெட்டுக்கு நைட் வாட்ச்மேனாக இறக்கப்பட்ட குல்தீப் யாதவும், சாய் சுதர்சனும் களத்தில் நிற்கின்றனர்.
கைவசம் 8 விக்கெட்டுகள் வைத்திருக்கும் இந்தியா வெற்றிபெற இன்னும் 522 ரன்கள் அடிக்க வேண்டும்.

கடைசி நாளான நாளை இவ்வளவு பெரிய ஸ்கோரை அடிப்பது இந்தியாவுக்கு கிட்டதட்ட முடியாத காரியம். நாளை முழுவதும் இந்தியா பேட்டிங் செய்து ஆல் அவுட் ஆகாமல் போட்டியை டிரா செய்தாலே பெரிய விஷயம்தான்.
எனவே, நாளை 549 ரன்கள் டார்கெட் சேஸ் செய்யப்பட்டால் அது இந்தியாவுக்கு வரலாறு, அப்படியில்லாமல் போட்டி டிரா ஆனாலோ அல்லது இந்தியா தோற்றாலோ அது 25 வருடங்களுக்குப் பிறகு இந்திய மண்ணில் டெஸ்ட் தொடர் வென்றதாக தென்னாப்பிரிக்காவுக்கு வரலாறு.
யார் சாதனை படைக்கப்போகிறார்கள் என்பதை நாளை பார்க்கலாம்.
கம்பீர் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற பிறகு சொந்த மண்ணில் படுமோசமாகச் செயல்படும் இந்திய அணியின் செயல்பாடு குறித்து உங்களின் கருத்துக்களை கமெண்ட்டில் பதிவிடுங்கள்.!