கோவில்பட்டி: குடும்பத் தகராறு; டாஸ்மாக் மதுபானக் கூடத்தில் 2 பேர் கொலை செய்யப்பட்ட கொடூரம்!

தூத்துக்குடி மாவட்டம்,  கோவில்பட்டி அருகேயுள்ள  காப்புலிங்கம்பட்டியைச் சேர்ந்தவர் முருகன். அதே ஊரைச் சேர்ந்த இவரது உறவினர் மந்திரம். இவர்கள் 2 பேரும்  தளவாய்புரம் பகுதியிலுள்ள மதுபானக் கூடத்தில் மது அருந்திக் கொண்டிருந்தபோது, இவர்களது உறவினரான அதே ஊரைச் சேர்ந்த கோமு என்பவர், “என்னுடைய மனைவி தங்கத்தாய் பிரிந்து சென்றதற்கு நீங்கள்தான் காரணம்” எனக்கூறி இருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.  

கொலையாளி கோமு- கொலை செய்யப்பட்ட மந்திரம் & முருகன்

அப்போது இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றவே மறைத்து வைத்திருந்த அரிவாளால் முருகன் மற்றும் மந்திரத்தை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். மதுபானக்கூடத்தில் இருந்தவர்கள், பலத்த காயம் அடைந்த இருரையும் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.  அங்கு பரிசோதனை செய்த மருத்துவர், முருகன் இறந்து விட்டதாக கூறினார். மந்திரம்  முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர், தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.  

அங்கு சிகிச்சை பெற்று வந்த மந்திரம், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து கயத்தாறு காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்ததுடன் கொலை செய்த கோமுவை  தேடி வருகின்றனர்.  போலீஸாரிடம் பேசினோம், “முருகனின் அக்கா தங்கத்தாய். தங்கத்தாயைத்தான் கொலையாளியான கோமு திருமணம் செய்துள்ளார். முருகனின் தங்கை மாரியம்மாளை திருமணம் செய்தவர்தான் மந்திரம். மூவருமே நெருங்கிய உறவினர்கள்தான்.

கயத்தார் காவல் நிலையம்

போலீஸாரால் தேடப்பட்டு வரும் கோமு,  ஏற்கெனவே ஒரு கொலை வழக்கில் 14 ஆண்டுகள் சிறை தண்டனை  அனுபவித்தவர். சிறையை விட்டு வெளியே வந்தபிறகு விவசாயம் செய்து  வந்துள்ளார். அடிக்கடி மது அருந்திவிட்டு தனது மனைவி மற்றும் மகன் மாடசாமியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.  கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது மகனை கத்தியால் குத்த முயன்றுள்ளார். அத்துடன் அவரது மனைவியும் தாக்கியுள்ளார். இதனால், அவரது மனைவி மற்றும் மகன் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். அவரது மனைவி தங்கத்தாய் ஊரைவிட்டு வெளியேறி வெளியூரில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

தன்னுடைய மனைவி கோபித்துக் கொண்டு வெளியூர் சென்றதற்கு முருகன் மற்றும் மந்திரம் ஆகிய இருவரும்தான் காரணம் என்று கூறி  அடிக்கடி கோமு, தகராறு செய்து வந்துள்ளார். அது மட்டுமின்றி தன்னுடைய மனைவி இருக்கும் இடத்தை கூறும்படி இருவரிடமும் கேட்டு வந்துள்ளார். இதற்கிடையில் முருகன், மந்திரம் ஆகிய இருவரும் மதுபானக்கூடத்தில் மது அருந்திக் கொண்டிருப்பதைப் பார்த்த்துள்ளார் கோமு.

கயத்தார் காவல் நிலையம்

அப்போது, ”என்னுடன் என் மனைவியை வாழ விடாமல் கெடுத்து விட்டு நீங்கள் மட்டும் சரக்கடித்து சந்தோசமாக இருக்கலாமா?”  என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில் இருவரையும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடியுள்ளார். இந்த நிலையில் கோமு, முருகன் மற்றும் மந்திரத்தை அரிவாளால் சரமாரியாக வெட்டும் பதபதைக்கும் சி.சி.டி.வி. காட்சிகள், சமூக வலைதளங்களில்  வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.