லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்து 2014ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான ‘அஞ்சான்’ திரைப்படம் இந்த வாரம் வெள்ளிக்கிழமை நவ.28ம் தேதி திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது.
படத்தின் நேரம் 36 நிமிடம் குறைக்கப்பட்டு, நடிகர் சூரியின் காட்சிகள் நீக்கப்பட்டு, திரைக்கதையில் மாற்றம் செய்யப்பட்டு, தவறுகள் எல்லாம் சரி செய்யப்பட்டு இப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்படுவதாக இயக்குநர் லிங்குசாமி கூறியிருக்கிறார்.

இன்று சென்னையில் நடைபெற்ற ‘அஞ்சான்’ ரீ ரீலிஸ் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய லிங்குசாமி, “சூர்யா படங்கள் எல்லாத்தையும் இப்போ டார்கெட் பண்றாங்களானு தெரியல. அதுவும் இங்க இருக்கு. நிறைய நெகட்டிவிட்டு இருக்கு.
இருந்தாலும் நல்ல படம் கொடுத்தால் யாராலும் எதுவும் செய்ய முடியாது என்றே நான் நினைக்கிறேன்.
2014ம் ஆண்டு ‘அஞ்சான்’ ரிலீஸ் ஆனபோது எல்லாரும் கடுமையாக விமர்சனம் பண்ணாங்க. அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் ‘அஞ்சான்’.
நானும் 100 சதவீதம் சரியான படம் பண்ணல. நிறைய தப்பு பண்ணிருக்கேன் அந்தப் படத்துல. அதனால எனக்கு வந்த விமர்சனங்களை எல்லாம் ஏத்துக்கிட்டேன்.
ஆனால், நான் பண்ண தப்ப பலமடங்காக ஊதி பெருசாக்கி திட்டுனாங்க. அன்னைக்கு எனக்கு ஆதரவாகப் பேசிய இயக்குநர் வெங்கட் பிரபுவையும் திட்டுனாங்க.

அன்னைக்கு எனக்கு நடந்தது என்று வருத்தப்பட்டேன். ஆனால், இன்னைக்கும் என்னைப்போல பல இயக்குநர்கள் போலியான விமர்சனங்களால பாதிக்கப்படுகிறார்கள். நெகட்டிவிட்டி அதிகமாகிடுச்சு. தனிப்பட்டு ஒருவரை காலி செய்ய வேண்டும் என்றே சிலர் வேலை பார்க்கிறார்கள். அது சினிமாவுக்கே ஆபத்து.
நல்ல விமர்சகர்கள், பார்வையாளர்கள் கிட்ட இருந்து வந்த விமர்சனங்களை எல்லாம் ஏத்துக்கிட்டு அதையெல்லாம் சரி பண்ணி இப்போ ரீ-எடிட் செய்து ‘அஞ்சான்’ படத்தை ரீ-ரிலீஸ் செய்கிறேன்.
ஏற்கனவே இந்தப் படத்துக்கு வந்த நிறைய கடுமையான விமர்சனங்கள பார்த்துட்டேன். புதுசா என்னை திட்டுறதுக்கு ஏதுமில்லை. அதுனால வெற்றி – தோல்வி விமர்சனங்கள் பற்றி பயமில்லாமல் ‘அஞ்சான்’ படத்தை நவ.28ம் தேதி வெள்ளிக்கிழமை’ ரீ-ரிலீஸ் செய்கிறேன்” என்று பேசியிருக்கிறார் லிங்குசாமி.