நெல்லை புறநகர் பகுதியான பேட்டை, ஐஓபி காலனியைச் சேர்ந்தவர் ஜேம்ஸ் பால். 57 வயதான இவர் அந்தப் பகுதியில் கிறிஸ்துவ ஊழியம் செய்து வருகிறார். அவரது மகள் மதுரையில் உள்ள தனியார் வங்கியொன்றில் பணியாற்றி வருகிறார். அவருக்கு துணையாக ஜேம்ஸ் பாலின் மனைவி வசித்து வருகிறார். அதனால் ஜேம்ஸ் பால் அடிக்கடி மதுரைக்கு சென்று மனைவி மற்றும் மகளை சந்தித்து விட்டு வருவது வழக்கம். அதன்படி கடந்த 24-ம் தேதி அவர் மதுரைக்குச் சென்றார். அவரது வீட்டில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி இருந்ததால் அங்கிருந்தபடியே மொபைல் போனில் வீட்டையும் கண்காணித்து வந்தார்.

இந்த நிலையில், 25-ம் தேதி அவர் பார்த்த போது சிசிடிவி கேமரா வேலை செய்யவில்லை. அதனால் அருகில் இருந்த வீட்டில் உள்ளவருக்கு போன் செய்து வீட்டுக்குச் சென்று பார்க்குமாறு கூறியுள்ளார். அதன்படி அருகில் வசிப்பவர் ஜெம்ஸ் பால் வீட்டுக்குச் சென்றபோது அவரது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு கிடப்பதைப் பார்த்துள்ளார். இது பற்றிய தகவல் அறிந்ததும் மதுரையிலிருந்து புறப்பட்டு வந்த ஜேம்ஸ் பால், வீட்டுக்குள் சென்றபோது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் அனைத்தும் அறை முழுவதும் சிதறிக் கிடந்தன. அத்துடன், வீட்டில் வைக்கப்பட்டிருந்த 25,000 ரொக்கப் பணம் காணாமல் போயிருந்தது.
அதனால் அதிர்ச்சியடைந்த அவர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த பேட்டை காவல்துறையினர், வீட்டில் ஆய்வு செய்தனர். அப்போது வீட்டில் இருந்த பொருட்கள் சூறையாடப்பட்டு கிடந்ததுடன், சிசிடிவி பதிவுகள் எடுத்துச் செல்லப்பட்டதைக் கண்டுபிடித்தனர்.

திருட்டு நடந்த வீட்டில் ஒரு கடிதம் சிக்கியது. அதை அந்த வீட்டில் கைவரிசை காட்டிய திருடனே எழுதியுள்ளார். அதில், ‘உன் வீட்டில் ஒரு ரூபாய் கூட இல்லை. இதுக்கு இத்தனை சிசிடிவி கேமரா. அடுத்த தடவை என்னை மாதிரி திருடன் வந்தால் ஏமாறாமல் இருக்க காசு வை. மன்னித்துக் கொள்ளவும் – திருடன்’ என எழுதப்பட்டிருந்தது.

அதனையும் கைப்பற்றிய போலீஸார், அருகில் உள்ள வீடுகளில் இருக்கும் சிசிடிவி பதிவுகளை ஆய்வுசெய்து, அந்த நூதனத் திருடனைத் தேடி வருகின்றனர். இந்த திருட்டுச் சம்பவத்தால் பேட்டை பகுதியில் குடியிருக்கும் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.