சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட்: தமிழக அணி தோல்வி

ஆமதாபாத்,

18-வது சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 கிரிக்கெட் போட்டி ஆமதாபாத், ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ ஆகிய நகரங்களில் நேற்று தொடங்கியது.

இதன் ‘எலைட்’ பிரிவில் பங்கேற்கும் 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் லீக் சுற்றுக்குள் நுழையும். ‘பிளேட்’ பிரிவில் கலந்து கொண்டுள்ள 6 அணிகள் இடையிலான ஆட்டம் புனேயில் நடக்கிறது.

இதில் ஆமதாபாத்தில் நடந்த ஒரு ஆட்டத்தில் (டி பிரிவு) 3 முறை சாம்பியனான தமிழ்நாடு, ராஜஸ்தானை எதிர்கொண்டது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த தமிழக அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 169 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சோனு யாதவ் 43 ரன்னும் (25 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்), ஜெகதீசன் 29 ரன்னும் சேர்த்தனர்.

ராஜஸ்தான் தரப்பில் அசோக் ஷர்மா 3 விக்கெட்டும், மானவ் சுதர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் அணி 16.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 170 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கடைசி வரை களத்தில் நின்று அணியை வெற்றிக்கு அழைத்து சென்ற தீபக் ஹூடா 76 ரன்கள் (36 பந்து, 6 பவுண்டரி, 6 சிக்சர்) ஆட்டநாயகன் விருது பெற்றார். தமிழகம் தரப்பில் டி.நடராஜன் 2 விக்கெட்டும், கேப்டன் வருண் சக்ரவர்த்தி, குர்ஜப்னீத் சிங் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். தமிழக அணி அடுத்த ஆட்டத்தில் நாளை டெல்லியை சந்திக்கிறது. இதற்கிடையே தமிழக அணியில் சாய் சுதர்சன் சேர்க்கப்பட்டுள்ளார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.