Gautam Gambhir : இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் மோசமாக விளையாடி வருவது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட தொடரை மிக மிக மோசமாக இந்திய அணி இழந்திருப்பது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத்தொடர்ந்து பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து கவிதம் கம்பீரை நீக்க வேண்டும் என்ற விமர்சனக் குரல்கள் ஓங்கி ஒலிக்க தொடங்கியுள்ளன. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கவுகாத்தி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 408 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்ததை யா்ராலும் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.
Add Zee News as a Preferred Source
இது டெஸ்ட் வரலாற்றில் ரன்கள் அடிப்படையில் இந்திய அணி பெற்ற மோசமான தோல்வியாகும். இந்த அதிர்ச்சி தோல்வியைத் தொடர்ந்து, இந்திய டெஸ்ட் அணியின் தலைமைப் பயிற்சியாளரான கவுதம் கம்பீரின் எதிர்காலம் குறித்த கேள்விகள் எழுந்துள்ளன. ஆனால், புள்ளிவிவரங்களைப் பார்த்தால், இந்திய அணியின் பயிற்சியாளர்கள் பட்டியலில் கம்பீரை விட மோசமான சாதனைகளை கொண்ட ஒரு பயிற்சியாளர் இருக்கிறார் என்பதே உண்மை
கவுதம் கம்பீரின் சாதனை:
கடந்த ஆண்டு பொறுப்பேற்ற கௌதம் கம்பீர் தலைமையில், இந்திய அணி இதுவரை 18 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் 7 வெற்றிகள், 9 தோல்விகள் மற்றும் 2 டிராக்கள் அடங்கும். இவரது பயிற்சியின் கீழ் இந்திய அணியின் வெற்றி சதவீதம் வெறும் 38.9 விழுக்காடு மட்டுமே. கடந்த 25 ஆண்டுகளின் புள்ளிவிவரங்களை எடுத்துக்கொண்டால், கம்பீரின் வெற்றி சதவிகிதம் மிக மோசமாக உள்ளது. குறைந்தபட்சம் 15 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்குப் பயிற்சியாளராகப் பணியாற்றியவர்களில், டங்கன் ஃபிளெட்சரை (33.3%) தவிர மற்ற அனைவரையும் விடவும் கம்பீரின் வெற்றி விகிதம் குறைவாகவே இருக்கிறது. அதாவது, டெஸ்ட் கிரிக்கெட்டில் கம்பீர் இரண்டாவது மோசமான சாதனை படைத்த இந்தியப் பயிற்சியாளராக உள்ளார்.
கிரெக் சேப்பல் கூட கம்பீரை விடச் சிறந்தவர்:
இந்திய கிரிக்கெட்டில் மிகவும் சர்ச்சைக்குரிய பயிற்சியாளர்களில் ஒருவராகக் கருதப்பட்ட கிரெக் சேப்பல் கூட, கம்பீரை விடச் சிறந்த வெற்றி விகிதத்தைக் கொண்டிருந்தார். 2005 மற்றும் 2007க்கு இடையில் 18 போட்டிகளுக்குப் சேப்பல் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தபோது, இந்திய அணி 7 போட்டிகளில் வெற்றி பெற்றது. 7 போட்டிகளை டிரா செய்தது. அவர் பயிற்சியில் இந்திய அணி வெறும் நான்கு போட்டிகளில் மட்டுமே தோல்வியை தழுவியிருந்தது.
இந்திய அணியின் பெஸ்ட் பயிற்சியாளர் யார்?
ஐம்பது சதவிகிதத்துக்கும் அதிகமான வெற்றி விகிதத்துடன் தங்கள் பதவிக் காலத்தை முடித்த முழுநேர இந்தியப் பயிற்சியாளர்கள் மூவர் மட்டுமே உள்ளனர். அவர்கள்:
1. அனில் கும்ப்ளே (2016-2017): 17 டெஸ்டில் 12 வெற்றிகள், 1 தோல்வி, 4 டிரா என அசத்தலான 70.6% வெற்றி விகிதத்துடன் முதலிடத்தில் உள்ளார்.
2. ராகுல் டிராவிட் (2021-2024): 24 டெஸ்டில் 14 வெற்றிகள், 7 தோல்விகள், 3 டிரா என 58.3% வெற்றி விகிதம் பெற்றிருக்கிறார். இவர் ரவி சாஸ்திரியை விடச் சற்றே முன்னிலையில் இருக்கிறார்.
3. ரவி சாஸ்திரி (2017-2021): 43 டெஸ்டில் 25 வெற்றிகள், 13 தோல்விகள், 5 டிரா என 58.1% வெற்றி விகிதத்துடன் பல வரலாற்றுச் சிறப்புமிக்க வெளிநாட்டு வெற்றிகளைப் பெற்றுத் தந்தார்.
சொந்த மண்ணில் தொடரும் சோகம்:
கவுகாத்தியில் கிடைத்த இந்த படுதோல்வி, இந்திய அணி சொந்த மண்ணிலும் வெளிநாட்டிலும் ரன்கள் அடிப்படையில் சந்தித்த மிக மோசமான தோல்வி மட்டுமல்ல, கடந்த 13 மாதங்களில் இந்திய அணி சொந்த மண்ணில் இரண்டாவது முறையாகத் தொடரை முழுமையாக இழந்திருக்கிறது (Whitewashed). இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும் இந்தியாவின் வாய்ப்புகளை வெகுவாகப் பாதித்துள்ளது.
2000ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவிடம் 0-2 எனத் தொடரை இழந்த பிறகு, கடந்த ஆண்டு நியூசிலாந்துத் தொடர் வரை, இந்திய அணி சொந்த மண்ணில் இரண்டு முறை மட்டுமே தொடர்களை இழந்திருந்தது. 2004 ஆஸ்திரேலியா மற்றும் 2012 இங்கிலாந்து. ஆனால், தற்போது அடுத்தடுத்த ஆண்டுகளில், அதாவது 1983 வெஸ்ட் இண்டீஸ் மற்றும் 1984/85 இங்கிலாந்து தொடர்களுக்குப் பிறகு இரண்டாவது முறையாகச் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடர்களை இழந்திருப்பது இந்திய கிரிக்கெட்டுக்குப் பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது.
கவுதம் கம்பீரின் எதிர்காலம் கேள்விக்குறியாகியிருந்தாலும், புள்ளிவிவரங்கள் அடிப்படையில் இந்திய அணியின் மோசமான பயிற்சியாளர் பட்டியலில் டங்கன் ஃபிளெட்சரே முதல் இடத்தில் உள்ளார். எனினும், சொந்த மண்ணில் தொடரும் இந்தத் தோல்விகளுக்குப் பயிற்சியாளர் மட்டுமல்ல, ஒட்டுமொத்த அணி நிர்வாகமும் பொறுப்பேற்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
மேலும் படிக்க | ஐபிஎல் 2026 மினி ஏலத்தில் இந்த 7 வீரர்களை யாரும் வாங்க போவதில்லை
மேலும் படிக்க | கேப்டனாக அறிவிக்கப்பட்ட சஞ்சு சாம்சன்! மினி ஏலத்திற்கு முன்னதாக நியமனம்!
About the Author

Karthikeyan Sekar
I am Karthikeyan, a Senior Sub-Editor at Zee Tamil News Channel, bringing 10 years of experience in the media industry. I have extensive experience working in both news television and online website platforms.
…Read More