ரோட்டில் குறுக்கிட்ட பாம்பு; நிலைதடுமாறி ஓடையில் பாய்ந்த ஆட்டோ – இரண்டு குழந்தைகள் பலியான சோகம்!

கேரள மாநிலம், பத்தனம்திட்டம் மாவட்டம், கோனி-யை அடுத்த தேக்குதோடு தும்பைக்குளம் பகுதியில் நேற்று மாலை ஆட்டோ ஒன்று ஓடையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்த ஆட்டோவில் கருமான்தோடு ஸ்ரீ நாராயணா பள்ளி மாணவ மாணவியர்களான 6 குழந்தைகள் பயணித்தனர். இந்த நிலையில் சாலையில் ஒரு பாம்பு குறுக்கிட்டது. அந்த பாம்பின் மீது ஆட்டோ ஏறிவிடக் கூடாது என்பதற்காக டிரைவர் ராஜேஷ் திடீரென ஆட்டோவை பக்கவாட்டில் திருப்பினார். இதனால் நிலைதடுமாறிய ஆட்டோ, சாலை ஓரத்தில் சுமார் நூறு அடி ஆழத்தில் தண்ணீர் சென்றுகொண்டிருந்த ஓடையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. உடனடியாக அப்பகுதி மக்கள் மாணவர்களை மீட்டு பல்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த தும்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவி ஆதிலட்சுமி (7) மரணமடைந்தார். மற்றொரு குழந்தையான யதுகிருஷ்ணா (4) மரணமடைந்த தகவல் சற்று தாமதமாக தெரியவந்தது.

விபத்தில் மரணமடைந்த குழந்தை ஆதிலட்சுமி

அந்த ஆட்டோவில் பயணித்த குழந்தைகளின் பெற்றோர் மருத்துவமனைக்கு சென்று பார்த்தபோதுதான் அதில் யதுகிருஷ்ணா(4) என்ற குழந்தையை காணவில்லை என பெற்றோர் கதறினர். இதையடுத்து விபத்து நிகழ்ந்த ஓடையில் தீயணைப்புத்துறை மற்றும் மீட்புத் துறையினர் தேடினர். நேற்று இரவு இறந்த நிலையில் யது கிருஷ்ணாவின் உடல் மீட்கப்பட்டது. இறந்த குழந்தைகளின் இறுதிச்சடங்கு இன்று நடந்தது. ஏராளமான மக்கள் கலந்துகொண்டு கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினர்.

பலியான யதுகிருஷ்ணா

இதுகுறித்து சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறுகையில், “ஆதிலட்சுமியும், யது கிருஷ்ணாவும் ஆட்டோவில் இருந்து தெறித்து வெளியே விழுந்துள்ளனர். ஆதிலட்சுமி மீது ஆட்டோ கவிழ்ந்து விழுந்ததில் அவர் படுகாயம் அடைந்தார். அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தும், காப்பாற்ற முடியவில்லை. யதுகிருஷ்ணா தெறித்து ஓடை தண்ணீரில் விழுந்துவிட்டார். யதுகிருஷ்ணாவை யாரும் கவனிக்கவில்லை. மீட்புப் பணியில் ஈடுபட்டவர்கள் அனைவரையும் மீட்டுவிட்டதாக நினைத்தனர். யதுகிருஷ்ணாவின் பெற்றோர் கூறியபிறகே சுமார் இரண்டு மணி நேரத்துக்குப் பின் அந்த குழந்தையை தேடத்தொடங்கினர். ஆரம்பத்திலேயே தெரிந்திருந்தால் அந்த குழந்தையை காப்பாற்ற வாய்ப்பு கிடைத்திருக்கும்” என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.