கவின் நடித்திருக்கும் ‘மாஸ்க்’ திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
படத்தில் ஆண்ட்ரியா கேங்கில் வரும் பேட்டரி என்ற கதாபாத்திரத்தில் நடிகர் வெங்கட் செங்குட்டுவன் பலரையும் சர்ப்ரைஸ் செய்திருக்கிறார்.
பெரிய மீசை, கலர் சட்டை, துப்பாக்கி வைத்திருக்கும் ஸ்டைல் என அந்த பேட்டரி கதாபாத்திரத்தின் ஹைலைட் விஷயங்களை பெரிய லிஸ்ட் போடலாம்.

சிரிப்பூட்டும் காமிக் முகப்பாவனை, கோபமூட்டும் வில்லத்தனம் என நடிப்பிலும் தன்னுடைய இருப்பை ஆழமாக பதித்திருக்கிறார் வெங்கட்.
இதற்கு முன் ‘அயலான்’ திரைப்படத்தில் ஏலியனுக்கு டூப் போட்டிருந்ததும் இவர்தான். மக்களின் பாராட்டுகள் தந்திருக்கும் உற்சாகத்தில் நம் அலுவலகத்திற்கு வந்தார் வெங்கட். வாழ்த்துகள் தெரிவித்து ‘மாஸ்க்’ திரைப்படம் தொடர்பாக பல விஷயங்களைக் கேட்டோம்.
நம்மிடையே வெங்கட் பேசுகையில், “எனக்கு தியேட்டர்ல கிடைக்கிற பாராட்டு ரொம்பவே புதுசு. ‘அயலான்’ திரைப்படத்துல என்னுடைய முகம் தெரியல.
‘மதிமாறன்’ படத்திற்கு ஆடியன்ஸை தியேட்டருக்கு படம் பார்க்கக் கூப்பிட்டோம். இன்னைக்கு நான் இருக்கிற ஒரு படத்துக்கு மக்கள் இத்தனை கூட்டமாக வந்து பார்க்கிறாங்கிறதே பெரிய சந்தோஷம்.
மக்களும் என்னை அடையாளப்படுத்தி பாராட்டுறாங்க. மற்ற இடங்கள்ல என்னை ஒருத்தர் அடையாளப்படுத்தி பாராட்டுறதுக்கும் தியேட்டர் வாசலில் ஒருவர் என்னை அடையாளப்படுத்தி பாராட்டுறதுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கு.

தியேட்டர் வாசலில் கிடைக்கிற பாராட்டெல்லாம் பெரும் மகிழ்ச்சியையும், ஊக்கத்தையும் தந்து நடிப்பின் மீதான நம்பிக்கையையும் அதிகரிக்கும்.
ரொம்ப நாட்களுக்கு முன்னாடி, நான் நடிச்சிருந்த வெப் சீரிஸைப் பார்த்துட்டு இயக்குநர் விகர்ணன் அசோக் என்னை கான்டாக்ட் பண்ணி, இந்த மாதிரி ஒரு படம் இருக்குனு சொன்னாரு. பிறகு ஆபீஸுக்குக் கூப்பிட்டு கதையும் படிக்கக் கொடுத்தாரு.
படிக்கும்போதே எனக்கு எழுதப்பட்ட பேட்டரி கதாபாத்திரத்தை ரொம்ப என்ஜாய் பண்ணினேன். சொல்லப்போனால், பேட்டர் என்கிற பெயருக்கு பின்னாடியே பெரிய கதை இருக்கு.
படத்துல என்னுடைய காஸ்டியூம், மீசை எதனால அப்படி காமிக் வடிவத்துல அமைந்திருந்துங்கிறதுக்குப் பின்னாடியும் சில கதைகள் இருந்தது. அதெல்லாம் அந்தக் கேரக்டருக்கு நல்ல விஷயமாக இருந்திருக்கும்.
ஆனா, அது படத்துக்கு தேவையில்லாத விஷயமாக இருந்துச்சு. அதனாலதான் அதெல்லாம் காட்சிகளாகப் படத்துல வரல.” என்றவர், “எனக்கு ‘அயலான்’ ஒரு அனுபவத்தைக் கொடுத்தது.
பிறகு ‘மதிமாறன்’ ஒரு வகையிலான அனுபவத்தை தந்திருக்கு. இந்தப் படத்துல வெற்றிமாறன் சாருடைய மென்டார்ஷிப்புல நான் வேலை பார்த்தது ரொம்ப முக்கியமான விஷயமாகப் பார்க்கிறேன்.
எங்க ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்தா ஜாலியாக இருக்குனு சொல்லியே வருவாரு. ஒரு தேவைப்படும் விஷயங்களை, கச்சிதமாக சொல்லி வாங்கிடுவாரு.
அவர் பேசுற நிறைய விஷயங்களே பயங்கர ஃபன்னா இருக்கும். ஏதாவது ஒரு இடத்துல உருவக்கேலி இருந்தாலும் வெற்றிமாறன் சார் அதை நோட் பண்ணி நீக்கச் சொல்லிடுவாரு.

அதே மாதிரிதான் கவின் சாரும் அப்படியான உருவக்கேலி காமெடிகளுக்கு நோ சொல்லிட்டாரு. ஒளிப்பதிவாளர் ஆர்.டி. ராஜசேகர் சாருடைய விஷுவல்களை நான் என்னுடைய சின்ன வயசுல இருந்து ரசிச்சு பார்த்திருக்கேன்.
அவர் எனக்கு ஃப்ரேம் வச்சதெல்லாம் பெரிய விஷயம்ங்க. அவர் எனக்காக ஃப்ரேம் வைப்பாரு. அப்போ, வெற்றிமாறன் சாரும் என்னை ஜாலியாகக் கலாய்ப்பாரு.
தயாரிப்பாளராகவும், நடிகராகவும் ஆண்ட்ரியா மேம் ரொம்ப ஸ்வீட். நமக்கு தேவையான விஷயங்களைச் செய்து கொடுப்பாங்க.
ஒரு பாடல்ல நான் டான்ஸ் பண்ற மாதிரி இருந்தது. ஆனா, மற்ற படங்கள்ல இருந்த கமிட்மென்ட்டால அதை என்னால பண்ண முடியல.
அப்படியான சூழலிலும், நான் அந்தப் பாட்டுல நடனமாடணும்னு ஆண்ட்ரியா வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தாங்க.
கவின் சார்கூட நான் இரண்டாவது முறை சேர்ந்து நடிக்கிறேன்னு சொல்லலாம் (சிரித்துக் கொண்டே..). ஆமாம், இதுக்கு முன்னாடி ‘சரவணன் மீனாட்சி’ தொடர்ல நான் அவர்கூட சேர்ந்து நடிச்சிருக்கேன். ஆனா, இந்த விஷயத்தை நான் ஷூட்டிங்ல அவர்கிட்ட சொல்லவே இல்ல.
அதெல்லாம் பெரிய கதைங்க! அதுல நான் ரொம்ப சின்ன கேரக்டர்லதான் நடிச்சிருந்தேன். ஷூட்டிற்காக என்னை அப்போ குற்றாலம் வரச் சொன்னாங்க.
அந்த சமயத்துல குற்றாலம் எனக்கு எங்க இருக்குனுகூட தெரியாது. எப்படியோ விசாரிச்சு அங்க போய் சேர்ந்துட்டேன்.

என்னை வரச் சொல்லி ரெண்டு நாட்கள் ஆகியும் எனக்கு காட்சிகளே இல்லை. மூணாவது நாள்லதான் எனக்கான காட்சிகளை எடுத்தாங்க.
அதுதான் என்னுடைய முதல் ப்ராஜெக்ட்னு சொல்லலாம். அந்த சீரியலுக்கு நான் டப்பிங் பேசி முடிச்சிட்டு 100 ரூபாய் வாங்கினேன்.
அதுதான் என்னுடைய முதல் சம்பளம். நடிப்பு மட்டும் கிடையாது. நிறைய விஷயங்களை நான் முயற்சி செய்து பார்த்திருக்கேன். அத்தனைகளிலும் நான் தோற்றுதான் போயிருக்கேன்.
அங்கிருந்து ரியாலிட்டி ஷோக்கள்னு பல வடிவங்கள்ல முயற்சி பண்ணிட்டே இருந்தேன். அப்போதான் ‘அயலான்’ வாய்ப்பு எனக்கு கிடைச்சது.” என்றார் மகிழ்ச்சியுடன்.