IPL Update: ஐபிஎல் 2026 தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் மாதம் நடக்க உள்ள நிலையில், அதற்கு முன்பாகவே ஐபிஎல் பிரேக்கிங் நியூஸ்கள் அடிக்கடி வந்து கொண்டிருக்கின்றன. அந்தவகையில், இப்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விற்பனை செய்ய பேச்சுவார்த்தை நடப்பதாக வந்திருக்கும் செய்தி ஐபிஎல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடப்புச் சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, 2026-ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனுக்கு முன்னதாக விற்பனைக்கு வரவுள்ள நிலையில், 2008-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் சாம்பியன் பட்டத்தை வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் உரிமையாளர் மாற்றத்தை பரிசீலிக்க தொடங்கியுள்ளது.
Add Zee News as a Preferred Source
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு விற்பனை
ஐபிஎல் அணிகள் விற்பனை செய்ய முக்கிய காரணம், அந்த அணிகளின் மதிப்பு இப்போது உச்சத்தில் இருக்கின்றன. இந்த வாய்ப்பை பணமாக மாற ஐபிஎல் அணிகளை வைத்திருக்கும் நிறுவனங்கள் முடிவெடுக்க தொடங்கியுள்ளன. ஆர்சிபி அணி உரிமையாளரான டியாஜியோ (Diageo) நிறுவனம் இந்த திட்டத்திலேயே ஆர்சிபி அணியை விற்க முடிவெடுத்துள்ளது.
டியாஜியோ நிறுவனம் நவம்பர் 5-ஆம் தேதி ஆர்சிபி அணியின் விற்பனைச் செயல்முறையைத் தொடங்கியதாக உறுதிப்படுத்தியது. இந்த விற்பனை குறித்த முதல் பொதுவான தகவல் அக்டோபர் 1-ஆம் தேதி ஆதார் பூனாவாலா (Adar Poonawalla) தனது ‘எக்ஸ்’ (X) தளத்தில் வெளியிட்டார். அப்போது தான் ஆர்சிபி விற்பனை குறித்த தகவல் கிரிக்கெட் உலகத்துக்கு தெரிய ஆரம்பித்தது.
ஆர்சிபி அணியின் மதிப்பு
ஆர்சிபி அணிக்கு இந்திய ரூபாயில் சுமார் 16,600 கோடிக்கும் மேல் மதிப்பு இருப்பதாக டியாஜியோ கருதுகிறது. 2022-ஆம் ஆண்டு ஃபோர்ப்ஸ் அறிக்கையின்படி, ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கு முன்னர் ஆர்சிபி அணியின் மதிப்பு 1 பில்லியன் டாலருக்கும் அதிகமாக இருந்தது நடப்பு சீசனில் கோப்பையை வென்ற பிறகு அணியின் மதிப்பு நிச்சயமாக மேலும் அதிகரித்திருக்கும்.
யார் வாங்க ஆர்வம்?
ஆர்சிபி அணியின் விற்பனையை மார்ச் 31, 2026-க்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாக டியாஜியோ மற்றும் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் நிறுவனங்கள் பங்குச் சந்தைக்குத் தெரிவித்துள்ளன. ஆதார் பூனாவாலா, நிகில் காமத், மற்றும் டி.வி. மோகன்தாஸ் பை ஆகியோர் கூட்டாக சேர்ந்து ஆர்சிபி அணியை ஏலம் எடுக்க முயற்சிக்கின்றனர். இதுதவிர ஹோம்பாலே பிலிம்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களும் ஆர்சிபியை வாங்க ஆர்வமாக இருக்கின்றன.
ராஜஸ்தான் ராயல்ஸ் விற்பனை
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை விற்பனை செய்ய பேச்சுவார்த்தை நடப்பதாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் உரிமையாளரான சஞ்சீவ் கோயங்காவின் சகோதரர் ஹர்ஷ் கோயங்கா தன்னுடைய சமூக ஊடக பக்கத்தில் ஒரு பதிவை எழுதினார். இதன்பிறகே இந்த செய்தி ஹாட் டாப்பிக்காக மாறியது. அவர் எழுதிய பதிவில் “ஆர்சிபி மட்டுமின்றி ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) உட்பட இரண்டு ஐபிஎல் அணிகள் தற்போது விற்பனைக்கு வந்துள்ளதாக அறிகிறேன். மக்கள் இன்றைய அதிகபட்ச மதிப்பீடுகளை பணமாக்க விரும்புவது தெளிவாகிறது. ஆர்சிபி மற்றும் ஆர்ஆர் ஆகிய இரு அணிகளுக்கும் புனே, அகமதாபாத், மும்பை, பெங்களூரு அல்லது அமெரிக்காவில் இருந்து 4 முதல் 5 வாங்குபவர்கள் இருக்கலாம்” என்று அந்த பதிவில் எழுதியிருக்கிறார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முக்கிய உரிமை, அதாவது சுமார் 65 சதவிகிதப் பங்குகள், ராயல்ஸ் ஸ்போர்ட்ஸ் குரூப் வசம் உள்ளன. லாக்லன் மர்டாக் (Lachlan Murdoch) மற்றும் ரெட் பேர்ட் கேபிடல் பார்ட்னர்ஸ் (RedBird Capital Partners) போன்ற முதலீட்டாளர்களிடம் சிறுபான்மை பங்குகள் உள்ளன. இருப்பினும், ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகம் தங்கள் அணி விற்பனைக்கு வரவுள்ளதாக வெளியான செய்திகளை உறுதிப்படுத்தவில்லை.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் லேட்டஸ்ட் அப்டேட்
1. ஐபிஎல் 2024 சீசனில் ஒன்பதாவது இடத்தைப் பிடித்த அந்த அணி, சஞ்சு சாம்சனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வர்த்தகம் (trade) செய்துவிட்டு, அதற்குப் பதிலாக ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரன் ஆகியோரைப் பெற்றுக் கொண்டது.
2. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அதன் சொந்த மைதானத்தை மாற்றும் முடிவில் இருப்பதாகத் தெரிகிறது. ராஜஸ்தான் கிரிக்கெட் அசோசியேஷன் (RCA) உடனான தொடர்ச்சியான சிக்கல்கள் காரணமாக, அணியின் உள்ளூர் போட்டிகளை ஜெய்ப்பூரிலிருந்து மாற்றுவது குறித்து பரிசீலிக்க தொடங்கியுள்ளது.
3. 2026-ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனுக்கான புதிய சொந்த மைதானமாக, புனேவில் உள்ள எம்சிஏ ஸ்டேடியம் (MCA Stadium) பரிசீலிக்கப்படுகிறது. இதற்கான ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகளும் தொடங்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
About the Author

Karthikeyan Sekar
Karthikeyan Sekar
…Read More