India vs South Africa : இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்திருக்கும் தென்னாப்பிரிக்க அணி, இப்போது இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் முதல் போட்டி நவம்பர் 30 ஞாயிற்றுக்கிழமை ராஞ்சியில் நடைபெற்றது. பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்ற இப்போட்டியில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் 3 போட்டிகள் கொண்ட ஒடிஐ தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. இப்போட்டியில் இந்திய அணி பெற்ற வெற்றி, டெஸ்ட் தொடரில் அடைந்த படுதோல்வியில் இருந்து மீண்டதுபோல் இருந்தது. விராட் கோலி, ரோகித் சர்மா மிகச்சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினர்.
Add Zee News as a Preferred Source
விராட் கோலி சாதனை
விராட் கோலி அபாரமாக விளையாடி சதமடித்தார். இது அவரது ஒருநாள் போட்டியில் 52வது சதமாக அமைந்தது. அத்துடன், ஒருநாள் போட்டியில் 51 சதங்கள் அடித்து அதிக சதங்கள் அடித்த பிளேயர் என்ற மாபெரும் சாதனையை வைத்திருந்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையையும் விராட் கோலி முறியடித்தார். இந்திய அணி வெற்றி பெற்ற பிறகு விராட் கோலியே ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். இது அவரின் 70வது ஆட்டநாயகன் விருதாகவும் அமைந்தது. விராட் கோலி 135 ரன்களும், ரோகித் 57, கேஎல் ராகுல் 60, ஜடேஜா 32 ரன்களும் எடுத்ததே இந்திய அணி 50 ஓவர்களில் 349 ரன்கள் குவிக்க காரணமாக இருந்தது.
தென்னாப்பிரிக்க பவுலர்களின் சோகம்
இதில், தென்னாப்பிரிக்கா அணி பவுலர்கள் 23 ரன்கள் எக்ஸ்டிரா மூலம் இந்திய அணிக்கு கொடுத்தனர். இதுவே, தென்னாப்பிரிக்க அணியின் தோல்விக்கு காரணமாக இருக்கும் என முதலில் பந்துவீசும்போது அவர்கள் அறிந்திருக்கவில்லை. ஏனென்றால், தென்னாப்பிரிக்க அணி, இப்போட்டியில் வெறும் 17 ரன்கள் வித்தியாசத்திலேயே தோற்றது. தென்னாப்பிரிக்க பவுலர்கள் இந்த எக்ஸ்டிரா ரன்களை மட்டும் கட்டுபடுத்தியிருந்திருந்தால் இந்த ஒருநாள் போட்டியின் முடிவு வேறு மாதிரியாக கூட இருந்திருக்கும். இந்திய அணியின் பவுலர்கள் வெறும் 6 ரன்கள் மட்டுமே எக்ஸ்டிராவாக கொடுத்தனர். இந்திய அணியினரைப் போலவே, தென்னாப்பிரிக்க பவுலர்களும் வெறும் 6 ரன்கள் அல்லது அதற்கு குறைவான எக்ஸ்டிராவை கொடுத்திருந்தால் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றிருக்க கூட முடியும்.
தென்னாப்பிரிக்கா அணி என்ன செய்யும்?
இதை தென்னாப்பிரிக்க அணியும், தோல்விக்கான காரணத்தை அலசும்போது நிச்சயம் இந்த காரணம் பிரதானமாக இருக்கும். போட்டி மு்டிந்த பிறகு எக்ஸ்டிரா ரன்களால் தான் தென்னாப்பிரிக்கா தோற்றது என்ற காரணத்தை சுட்டிக்காட்டுவது கிரிக்கெட்டைப் பற்றி அறியாதவர்கள் சொல்லக்கூடிய கணக்கு ஆகும். விளையாட்டின்போது எப்படி சூழல் இருந்தாலும், இலக்கை எட்டினோமா? இல்லையா? என்பதையே பார்க்க வேண்டும். அதை விடுத்து தோல்விக்கான காரணம் என ஒன்றை மட்டும் சுட்டிக்காட்டுவது, சரியாக இருக்காது. இதுவும் ஒரு காரணம் என கூறி தவறை திருத்திக் கொள்ளவே தென்னாப்பிரிக்க அணியினர் முயற்சிப்பார்கள். மற்றபடி இந்திய அணி சிறப்பாக விளையாடியதாலேயே இப்போட்டியில் வெற்றி பெற முடிந்தது.
அடுத்த ஒருநாள் போட்டி எப்போது?
இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி டிசம்பர் 3 ஆம் தேதி ராய்ப்பூரில் நடக்கிறது. மூன்றாவது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் டிசம்பர் 6ஆம் தேதி நடக்கிறது. இதன்பின்னர் இவ்விரு அணிகளுக்கு இடையிலான டி20 போட்டி நடக்க உள்ளது.
About the Author

Karthikeyan Sekar
Karthikeyan Sekar
…Read More