கருஞ்சால்வையை இழுத்துவிட்டபடி மேடையில் மைக் பிடித்து நின்றால், தூரத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கு அது வைகோவா நாஞ்சில் சம்பத்தா எனத் தெரியாது. அந்தளவு மதிமுக மேடைகளில் முக்கியத்துவம் பெற்று முழங்கி வந்தவர்.
பிறகு அதிமுகவில் சேர்ந்து ஜெயலலிதாவிடம் பிரசாரத்துக்காகவே இன்னோவா கார் வாங்கிய போது ‘இன்னோவா சம்பத் ‘ என இவரைக் கலாய்த்தவர்களும் உண்டு.

ஜெ. மறைவுக்குப் பிறகு மறுபடியும் திமுக மேடைகளில் பார்க்க முடிந்த சூழலில், தற்போது மீண்டும் அக்கட்சியுடன் பிரச்னை என்கிற தகவல்கள் உலா வருகின்றன.
திமுகவுடன் என்ன பிரச்னை? தவெக வில் சேரும் திட்டம் உள்ளதா? என்பன போன்ற கேள்விகளுடன் நாஞ்சில் சம்பத்திடம் பேசினோம்.
ஒன்றுக்கும் உதவாத 19 ஆண்டு பயணம்!
‘’நான் இன்னைக்கு திமுக உறுப்பினர் கிடையாது ஆனால் பிறந்தபோது திமுக காரன். மளிகைக் கடை வைத்திருந்த என் அப்பா பெரியார் கொள்கைகளால் ஈர்க்கப் பட்டவர். என் பெயரே சம்பத். வைகோ தனியா போனபோது அவர் மீது பழி சுமத்துறாங்களேன்னுதான் நானும் கூடசேர்ந்து வெளியேறுனேன். மதிமுகவில் 19 ஆண்டுகள் பயணித்தேன். அந்த அனுபவங்கள் ஒன்றுக்கும் உதவாமல் கடைசியில் அங்கிருந்து வெளியேற வேண்டி வந்தது.

வைகோவுக்குத் தன்னைப் போல இன்னொருவர் வளர்ந்திடக் கூடாதுங்கிற எண்ணம். அதனால் மறுபடியும் திமுகவில் சேரலாமென நினைத்து அந்த விருப்பத்தை ஒரு தொலைக்காட்சி பேட்டியில் வெளிப்படுத்தினேன். ஆனால் திமுகவில் கண்டு கொள்ளவில்லை.
மதிமுகவில் இருந்தபோது நான் திமுகவை விமர்சித்ததை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை எனத் தெரிய வந்தது.
இன்னோவா மட்டுமல்ல சுதந்திரமும் தந்த ஜெ!
ஆனால் என்னுடைய அந்தப் பேட்டி கண்டு என்னை அழைத்தார் ஜெயலலிதா அம்மையார். எனவே அதிமுகவில் சேர்ந்தது திட்டமிட்ட செயல் இல்லை. அதேநேரம் என் கொள்கையில் சமரசம் செய்துகொள்ள அவசியமில்லாத அளவுக்கு அங்கு எனக்கு சுதந்திரம் தந்திருந்தார் ஜெயலலிதா.

தவிர ’ராஜபக்ஷேவை குற்றவாளி என அறிவிக்க வேண்டும்’, ;இலங்கை ராணுவத்துக்கு இந்தியாவில் பயிற்சி தரக்கூடாது’ போன்ற தீர்மானங்களை இயற்றிய அவரது நடவடிக்கைகள் என்னை ஈர்த்தன. எனவே அவருடைய மறைவு வரை அந்த இயக்கத்தில் நான் இருந்தேன். அவருக்குப் பின் அங்கு யார் தலைமையையும் ஏற்க மனமில்லாததால் ஒதுங்கி இருந்தேன்.
இந்தச் சூழலில் பாசிச பாஜகவை எதிர்த்துக் குரல் கொடுத்து வரும் ஒரே காரணத்துக்காக மீண்டும் திமுக மேடைகளில் பேசி வந்தேன்’’ என்றவரிடம் தொடர்ந்து கேள்விகளை வைத்தோம்.
சி.எம். உதயநிதி!
பிறகு எப்படி மீண்டும் திமுகவுடன் பிரச்னை உருவானது?
’’ஒரு இடத்துல பேசறப்ப வருகிற 2026 தேர்தலில் திமுகவுக்கும் தவெகவுக்கும் தான் போட்டி எனப் பேசினேன். ஒரு பேச்சாளனாக எனக்குத் தோன்றியது அந்தக் கருத்து. அந்தக் கருத்தில் திமுகவுக்கு உடன்பாடில்லைபோல. நான் பேச சம்மத்தித்திருந்த சில கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டன. ரத்து செய்யப்பட்ட தகவல்கூட எனக்குத் தெரியப்படுத்தப் படவில்லை. அதையும் மீறி நவம்பர் 27 ல் உதயநிதி பிறந்த நாள் கூட்டத்தில் ’வருங்காலத்தில் முதல்வராக வருவார்’ என்றும் பேசினேன். ஆனால் அதற்கடுத்த நாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஏற்பாடு செய்திருந்த கூட்டமும் ரத்து செய்யப்பட்டது. வழக்கம்போல் தகவல் தெரிவிக்கவில்லை. அழைப்பார்கள் என சென்னையில் காத்திருந்து ஏமாற்றமடைந்து மனம் வருந்தி மறுநாள் ஊர் திரும்பினேன். அவர்கள் இனி என்னை அழைக்க மாட்டார்கள் என நினைக்கிறேன்.

தானா சேரும் கூட்டம்!
தவெக தரப்பிலிருந்து யாராவது பேசினார்களா? அந்தக் கட்சியின் வருகையை எப்படி பார்க்கிறீர்கள்?
அங்கிருந்து சில தம்பிகள் பேசினார்கள்.’பேச வேண்டியவர்கள் பேசினால்தான் சரியாக இருக்கும் என்பதால் அந்தப் பேச்சை வளர்க்கவில்லை. மற்றபடி அந்தக் கட்சியின் வருகை தமிழக அரசியல் களத்தில் ஒரு தாக்கத்தை ஏற்கெனவே உருவாக்கிவிட்டது. ஒரே நேரத்தில் மாநில, மத்திய அரசுகளை எதிர்ப்பதை விஜய்யின் போர்க்குணமாகவே பார்க்கிறேன். அவருக்காக கூடும் வாலிபர்கள் கூட்டம் தானாகச் சேர்கிற கூட்டம்தான். தாய்மார்கள் ஆதரவும் அவருக்குக் கிடைக்குமென நினைக்கிறேன்.
உதிரி, அவசியமற்ற நிகழ்காலமே இல்லாத கட்சிகள்!
2026 தேர்தல் நெருங்குகிறது. உங்கள் நிலையைப் போலவே அதிமுக, மதிமுக, பாமக என ஒவ்வொரு கட்சியையும் ஒரு குழப்ப சூழல் சூழந்துள்ளதே அது பற்றி?
என் விவகாரத்தில் நடந்ததைச் சொல்லி விட்டேன். இன்றைய தேதிக்கு நான் எந்தக் கட்சியிலும் இல்லை.

அதிமுகவைப் பொறுத்தவரை சசிகலா, பன்னீர் செல்வம் ஆகியோரைச் சேர்க்காத எடப்பாடி பழனிசாமி தேர்தலுக்குப் பிறகு சிக்கலைச் சந்திக்கலாம். உட்கட்சிப் பிரச்னை அங்கு மேலும் வலுத்து அது உதிரிக் கட்சி ஆகிவிடலாம்.
பா.ம.க சண்டையை நான் குடும்பப் பிரச்னையாகவே பார்க்கிறேன். முறைகேடாக சம்பாதித்த பணத்தை பங்கு போடுவதில்தான் அவர்களுக்குள் அடிதடி. வரும் தேர்தலுக்குப் பிறகு தமிழகத்துக்கு அவசியமில்லாத ஒரு கட்சி ஆகி விடும் அந்தக் கட்சி.
மதிமுகவுக்கு எதிர்காலம் உண்டா என நீங்கள் கேட்டால் கேள்வி தவறு. ஏனெனில் அந்தக் கட்சிக்கு நிகழ்காலமே இல்லையே!” என்கிறார் உறுதியாக