புதுடெல்லி,
இந்திய நாடாளுமன்றம் சாதாரணமாக ஆண்டுக்கு 3 முறை கூட்டப்பட்டு வருகிறது. ஜனவரி – பிப்ரவரி மாதத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரும், ஜூலை-ஆகஸ்ட் மாதத்தில் மழைக்கால கூட்டத்தொடரும், நவம்பர் அல்லது டிசம்பரில் குளிர்கால கூட்டத் தொடரும் நடத்தப்படுகிறது.
அதன்படி இந்த ஆண்டுக்கான குளிர்கால கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. வருகிற 19-ந்தேதி வரை நடக்கிறது. குறைவான நாட்கள் கூட்டத்தொடர் நடத்தப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. கடந்த மழைக்கால கூட்டத்தொடர், பீகாரில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை கண்டித்து எதிர்க்கட்சிகள் நடத்திய அமளிக்கு இடையே நடந்து முடிந்து விட்டது.
இதன் பிறகு நாட்டில் எவ்வளவோ பரபரப்பான விஷயங்கள் நடைபெற்றுள்ளன. தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடந்து வருகிறது. கடந்த மாதம் 10-ந்தேதி டெல்லியில் கார் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இப்படி பரபரப்பான சூழ்நிலையில் நாடாளுமன்றம் கூடுகிறது.
இந்த நிலையில், நாடாளுமன்றத்தை சுமுகமாக நடத்துவதற்காக அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தை நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய அரசு நேற்று நடத்தியது. ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஆளுங்கட்சி தரப்பில் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி கிரண் ரிஜிஜூ, மத்திய மந்திரிகள் ஜே.பி. நட்டா அர்ஜுன் ராம் மெக்வால், எல்.முருகன் எதிர்க்கட்சிகளில் காங்கிரஸ் சார்பில் பிரமோத் திவாரி, ஜெயராம் ரமேஷ், கவுரவ் கோகாய், தி.மு.க. சார்பில் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் டெரிக் ஓ பிரயன், கல்யாண் பானர்ஜி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் சார்பில் மனோஜ் ஜா, சமாஜ்வாடி கட்சி சார்பில் ராம் கோபால் யாதவ் என 36 கட்சிகளைச் சேர்ந்த 50 தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் இந்த கூட்டத்தொடருக்கு மிகவும் குறுகிய காலம் மட்டுமே இருப்பதால் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்தி முடித்திட அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கிரண் ரிஜிஜூ கேட்டுக்கொண்டார். பதிலுக்கு எதிர்க்கட்சிகள் தரப்பில், விவாதிக்கப்பட வேண்டிய பல விஷயங்களை எடுத்து கூறினார்கள்.
முக்கியமாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த விவாதத்துக்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றுபட்டு இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். மேலும் தேசிய பாதுகாப்பு குறித்தும் கவலை தெரிவித்தனர். மாநிலங்கள் சார்ந்த விவகாரம் குறித்தும் பேசப்பட வேண்டும் என்று தி.மு.க. எம்.பி.க்கள் தெரிவித்தனர். கவர்னர் விவகாரங்கள் பற்றியும் வலியுறுத்தப்பட்டது. இவ்வாறு அனைத்துக் கட்சிகளும் தங்களது தரப்பிலான நிலைப்பாட்டை கூட்டத்தில் முன் வைத்தனர்.
நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி கிரண் ரிஜிஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில், “இது குளிர்கால கூட்டத் தொடர் எனவே அனைவரும் குளிர்ந்த மனதுடன் இதில் கலந்து கொள்ள வேண்டும்” என்றார். நாடாளுமன்றம் முடக்கப்படக்கூடாது அது சுமுகமாக செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் விவாதம் கோரி இருப்பது பற்றி கேட்டதற்கு, அதுகுறித்து அலுவல் ஆய்வுக்குழு முடிவு செய்யும் என்று பதில் தெரிவித்தார்.
குளிர்ந்த மனதுடன் வாருங்கள் என்று ஆளும் கட்சி அழைப்பு விடுத்து இருந்தாலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாகவே தெரிகிறது.