காரைக்குடி–திருப்பத்தூர் சாலையில், பிள்ளையார்பட்டி அருகே காங்கேயத்திலிருந்து காரைக்குடி நோக்கி வந்த அரசுப் பேருந்தும், காரைக்குடியிலிருந்து திண்டுக்கல் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்ததாகவும், 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதிக்கப்பட்டவர்கள் மதுரை மற்றும் சிவகங்கை அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு, அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு அவர்களின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையில், விபத்துக்குள்ளான பேருந்தின் ஓட்டுநர் சென்ராயன் உயிரிழந்துள்ளார்.

மற்றொரு பேருந்தின் ஓட்டுநர் சுதாகர், நடத்துனர் கலைச்செல்வன் ஆகிய இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையில், விபத்து நடந்த பேருந்தில் இருந்த நடத்துனர் இது குறித்து பேசுகையில்,
“நாங்கள் சரியான பாதையில் சென்றுகொண்டிருந்தோம். எதிர்திசையில் வந்த பேருந்து வேகமாக வருவதைப் பார்த்ததும், சாலையிலிருந்து ஓரம் இறங்கி ஓட்டிக்கொண்டிருந்தோம். அதையும் மீறி அந்தப் பேருந்து ஏறிவந்து நேருக்கு நேர் மோதிவிட்டது. இந்த விபத்தில் என் ஒரு கையின் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. எங்கள் பேருந்தின் ஓட்டுநர் ஸ்டீயரிங்கில் சிக்கியதால் உயிரிழந்துவிட்டார்,” என்று தெரிவித்துள்ளார்.