நடிகர், மியூசிக் டைரக்டர் என பரபரப்பாக சுற்றி வருகிறார் ஜி.வி. பிரகாஷ்.
நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் ‘மென்டல் மனதில்’, இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் ‘இம்மார்டல்’ என நடிப்பில் அடுத்தடுத்த லைன் அப் வைத்திருக்கும் ஜி.வி. பிரகாஷ், சூர்யா 46, தனுஷ் 54, பராசக்தி, மண்டாடி, துல்கர் சல்மானின் தெலுங்கு படம் என மிகுந்த எதிர்பார்ப்பிற்குரிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

கோவா திரைப்பட விழாவின் இறுதி நாளில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்.
அதில் அவருடைய அடுத்தடுத்த படங்கள் குறித்து சில அப்டேட்கள் தந்திருக்கிறார்.
அதில் அவர், “எனக்கு இந்தாண்டு தேசிய விருது கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி. ‘லக்கி பாஸ்கர்’ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் வெங்கி அத்லூரி எனக்கு அற்புதமான கதையைச் சொல்லியிருக்கிறார்.
தொடர்ந்து எனக்கு நல்ல கதைகள் வருவதில் மகிழ்ச்சி. வெங்கி அத்லூரி இயக்கத்தில் சூர்யா சார் நடிக்கும் படத்திற்கான வேலைகள் நடந்து வருகின்றன.
அதுவொரு ஃபேமிலி டிராமா திரைப்படம். படமும் சிறப்பாக வந்துகொண்டிருக்கிறது. ‘அலா வைகுணடபுரமுலோ’ படத்தின் டோனில் இந்தப் படமும் இருக்கும்.
அதைத் தொடர்ந்து துல்கர் சல்மான் நடிக்கும் ‘ஆகாசம்லோ ஒக்கதாரா’ படத்திற்கு இசையமைத்து வருகிறேன்.

சுதா கொங்கராவின் ‘பராசக்தி’ திரைப்படம் ஜனவரி மாதம் வெளியாகிறது.
நீலம் தயாரிப்பில் நான், சுனில், ஶ்ரீநாத் பாசி என மூவரும் இணைந்து ஒரு படத்தில் நடித்திருக்கிறோம்.
அது பிப்ரவரி மாதம் வெளியாகும். நடிப்பு, இசை என இரண்டுமே வேறுபட்டது. நடிப்பிற்கு உடலளவில் உழைப்பைத் தர வேண்டும். இசை வேலைகளுக்கு சிந்தனையைப் பயன்படுத்த வேண்டும்.” எனப் பேசினார்.