ஏன் திடீர் என மேக்ஸ்வெல், ரஸ்ஸல் ஐபிஎல்லில் இருந்து விலகினர்? காரணம் இது தானா?

ஐபிஎல் 2026 சீசனுக்கான மினி ஏலம் டிசம்பர் மாதம் அபுதாபியில் நடைபெறவுள்ள நிலையில், டி20 கிரிக்கெட்டின் ஜாம்பவான்களான கிளென் மேக்ஸ்வெல் மற்றும் ஆண்ட்ரே ரஸ்ஸல் ஆகியோர் இந்த தொடரிலிருந்து விலகியுள்ளனர். இவர்களது இந்த திடீர் முடிவு, ஏலத்தில் பங்கேற்கும் மற்ற ஃபினிஷர்களான டேவிட் மில்லர் மற்றும் லியம் லிவிங்ஸ்டன் ஆகியோருக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தித் தரும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கணிக்கின்றனர். ஐபிஎல் என்றாலே அதிரடிச் சிக்ஸர்களும், கடைசி நேரப் பரபரப்புமே ரசிகர்களுக்கு விருந்தாக அமையும். அந்த வகையில், கடந்த பத்தாண்டுகளாக ஐபிஎல் மைதானங்களை அதிர வைத்த இரண்டு முக்கிய தூண்கள், வரும் 2026 சீசனில் களமிறங்க போவதில்லை என்பது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஆனால், இந்த இழப்பு வேறு சில வீரர்களுக்கு கோடிக்கணக்கில் பணமழை பொழிய வாய்ப்பாக அமைந்துள்ளது.

Add Zee News as a Preferred Source

மேக்ஸ்வெல், ரஸ்ஸலின் அதிர்ச்சி முடிவு

ஆஸ்திரேலியாவின் அதிரடி மன்னன் கிளென் மேக்ஸ்வெல், 2026 ஐபிஎல் ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்யாமல் விலகி கொள்வதாக அறிவித்துள்ளார். கடந்த 2025 சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடிய அவர், காயம் மற்றும் மோசமான ஃபார்ம் காரணமாக சோபிக்க தவறினார். “ஐபிஎல் எனக்கு பல மறக்க முடியாத நினைவுகளை தந்துள்ளது. ஆனால், இந்த முறை நான் ஏலத்தில் பங்கேற்கவில்லை” என்று அவர் உருக்கமாக தெரிவித்துள்ளார். தொடர்ச்சியான கிரிக்கெட் மற்றும் பணிச்சுமை காரணமாக அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

மறுபுறம், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியின் ஆஸ்தான வீரரான ஆண்ட்ரே ரஸ்ஸல், ஐபிஎல் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கேகேஆர் அணி அவரை விடுவித்ததை தொடர்ந்து, அவர் இனி வீரராக களமிறங்க மாட்டார். இருப்பினும், அவர் கேகேஆர் அணியின் உதவியாளராகவோ அல்லது ஆலோசகராகவோ தொடர வாய்ப்புள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் எந்த அணியும் இவர்களை ஐபிஎல் ஏலத்தில் எடுக்க விருப்பை என்று தெரிவித்து இருக்கலாம், அதனால் இருவரும் விலகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மில்லர் – லிவிங்ஸ்டனுக்கு எகிறும் டிமாண்ட்!

டி20 கிரிக்கெட்டில் ‘ஃபினிஷர்கள்’ மற்றும் ‘வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்கள்’ கிடைப்பது மிகவும் அரிது. மேக்ஸ்வெல் மற்றும் ரஸ்ஸல் போன்ற தரமான வீரர்கள் இல்லாதது, இந்த இடத்திற்கான தேவையை பன்மடங்கு உயர்த்தியுள்ளது. இதனால், ஏலத்தில் பங்கேற்கும் டேவிட் மில்லர் மற்றும் லியம் லிவிங்ஸ்டன்  ஆகியோருக்கு கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

டேவிட் மில்லர்: “கில்லர் மில்லர்” என்று அழைக்கப்படும் இவர், தனி ஆளாக ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடியவர். லக்னோ அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட இவரை வாங்க, சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் போன்ற அணிகள் முட்டி மோதலாம்.
லியம் லிவிங்ஸ்டன்: ஆர்சிபி அணியால் விடுவிக்கப்பட்ட லிவிங்ஸ்டன், பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலும் பங்களிக்கக்கூடியவர். மேக்ஸ்வெல் இல்லாத குறையைத் தீர்க்கப் பஞ்சாப் அல்லது ஆர்சிபி மீண்டும் இவரைக் குறிவைக்கலாம். சந்தை விதிகளின்படி, தேவை அதிகமாகவும் வரத்து குறைவாகவும் இருக்கும்போது விலை உயர்வது இயல்பு. அந்த வகையில், இந்த இரு வீரர்களின் ஏலத் தொகை ரூ.15 கோடியைத் தாண்டும் என்று கணிக்கப்படுகிறது.
டிசம்பர் 16-ல் மெகா வேட்டை

ஐபிஎல் 2026-க்கான மினி ஏலம் வரும் டிசம்பர் 16, 2025 அன்று அபுதாபியில் நடைபெறவுள்ளது. இதில் மொத்தம் 1,355 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். இதில் 45 வீரர்கள் தங்களின் அடிப்படை விலையை ரூ.2 கோடியாக நிர்ணயித்துள்ளனர். கேமரூன் கிரீன், ரவி பிஷ்னோய், வெங்கடேஷ் ஐயர் போன்றோரும் அதிக விலைக்கு போவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அணிகள் தங்கள் கையிருப்பில் உள்ள தொகையை வைத்து தங்களுக்கு தேவையான வீரர்களை தேர்வு செய்யத் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன. மேக்ஸ்வெல், ரஸ்ஸல் இல்லாத ஐபிஎல் களம் சற்று வெறிச்சோடினாலும், புதிய ‘மில்லியனர்கள்’ யார் என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

About the Author


RK Spark

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.