துமகூரு,
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் துருவகெரே மெயின் ரோட்டில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம். மையம் அமைந்துள்ளது. கடந்த மாதம்(நவம்பர்) 27-ந் தேதி இரவில் அங்கு பணம் எடுக்க ஒரு நபர் வந்தார். பின்னர் திடீரென்று அவர், ஏ.டி.எம். எந்திரம், அங்கிருந்த கண்ணாடி, பிற பொருட்களை அடித்து நொறுக்கி விட்டு சென்று விட்டார். மறுநாள் ஏ.டி.எம். மையத்திற்கு பணம் எடுக்க சென்ற மக்கள் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுபற்றி துருவகெரே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் மற்றும் வங்கி அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த பணம் கொள்ளை போகவில்லை என்று தெரியவந்தது. முதலில் ஏ.டி.எம். எந்திரத்தை மர்மநபர்கள் உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றதாக போலீசார் சந்தேகித்தனர்.
பின்னர் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு நடத்தினார்கள். அப்போது ஏ.டி.எம். மையத்திற்கு அந்த நபர் மது குடித்துவிட்டு குடிபோதையில் வருவது தெரியவந்தது. ஏ.டி.எம். கார்டு மூலமாக அவர் பணம் எடுக்க முயன்றும், பணம் வரவில்லை. அதன்பிறகு தான் அவர் ஏ.டி.எம். எந்திரம் மற்றும் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கியது தெரியவந்தது.
இதுகுறித்து துருவகெரே போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை தேடிவந்தனர். இந்த நிலையில், ஏ.டி.எம். எந்திரத்தை நொறுக்கியதாக வடிவேல்சாமி என்ற தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ளார். ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுக்க முயன்றும், வராததால் குடிபோதையில் எந்திரத்தை உடைத்து விட்டதாக வடிவேல்சாமி தெரிவித்துள்ளார். விசாரணைக்கு பின்பு அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.