புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல்- ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யா கடந்த செப்டம்பர் மாதம் நடந்த ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் போது இடது காலில் காயம் அடைந்தார். அவர் அதன் பிறகு எந்த போட்டியிலும் ஆடவில்லை. ஹர்திக் பாண்டியா காயத்தில் இருந்து மீள்வதற்கான பயிற்சி முறைகளை பெங்களூருவில் உள்ள இந்திய கிரிக்கெட் வாரிய சிறப்பு மையத்தில் மேற்கொண்டு வந்தார். அவருடைய உடல் தகுதியை ஆய்வு செய்த கிரிக்கெட் வாரிய மருத்துவ கமிட்டியினர், முழு உடல் தகுதியை எட்டியதை அடுத்து டி20 போட்டியில் பேட்டிங் மற்றும் பந்து வீச அனுமதி அளித்துள்ளனர். இதனால் ஹர்திக் பாண்டியா சுமார் 2½ மாத இடைவெளிக்கு பிறகு களம் திரும்புகிறார். தற்போது ஆமதாபாத், ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ ஆகிய இடங்களில் நடந்து வரும் 18-வது முஷ்டாக் அலி கோப்பைக்கான தொடரில் பரோடா அணிக்காக விளையாட இருக்கிறார். ஐதராபாத்தில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் பரோடா அணி, பஞ்சாப்பை எதிர்கொள்கிறது. அந்த அணி அடுத்து வரும் ஆட்டங்களில் குஜராத் (4-ந் தேதி), அரியானாவுடன் (6-ந் தேதி) மோதுகிறது.
வருகிற 9-ந் தேதி தொடங்கும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் தொடருக்கு முன்பாக தனது முழு உடல் தகுதியை நிரூபிக்க இந்த ஆட்டங்களில் ஹர்திக் பாண்டியா விளையாடுகிறார்.