தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. காயத்திலிருந்து குணமடைந்த நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா அணிக்கு திரும்பியுள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும், டி20 ஸ்பெஷலிஸ்ட்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் அணியிலிருந்து நீக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூர்யகுமார் யாதவ் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த அணியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த தொடர் வரும் டிசம்பர் 9-ம் தேதி தொடங்குகிறது.
Add Zee News as a Preferred Source
ஹர்திக் பாண்டியா ‘ரீ-என்ட்ரி’
ஆசிய கோப்பை 2025-ன் போது காயமடைந்த ஹர்திக் பாண்டியா, அதன் பிறகு எந்தவொரு சர்வதேச போட்டியிலும் பங்கேற்கவில்லை. சமீபத்தில் நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி டிராபி (SMAT) தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் உடற்தகுதியையும், ஃபார்மையும் நிரூபித்தார். இதன் அடிப்படையில், தென்னாப்பிரிக்கத் தொடருக்கு தேர்வுக் குழு அவரை மீண்டும் அணிக்குள் கொண்டு வந்துள்ளது. அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு சமநிலைக்கு இவரது வருகை பெரும் பலமாக அமையும்.
ஜெய்ஸ்வால், ரிங்கு சிங் ஏன் இல்லை?
அணியின் அறிவிப்பில் மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்தது யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரிங்கு சிங் ஆகியோரின் நீக்கம் தான். டி20 போட்டிகளில் இந்தியாவின் எதிர்கால நம்பிக்கையாக பார்க்கப்பட்ட இவர்கள், இந்த முக்கியமான தொடரில் புறக்கணிக்கப்பட்டுள்ளது கிரிக்கெட் வட்டாரத்தில் விவாதத்தை கிளப்பியுள்ளது. மேலும் ஒருநாள் தொடரிலிருந்து காயம் காரணமாக விலகியிருந்த தொடக்க வீரர் சுப்மன் கில், டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இருப்பினும், போட்டியில் அவர் பங்கேற்பது அவரது முழுமையான உடற்தகுதியை பொறுத்தே அமையும் என்று பிசிசிஐ தெளிவுபடுத்தியுள்ளது. அவர் முழுமையாக தேறும் பட்சத்தில் அபிஷேக் சர்மாவுடன் இணைந்து இன்னிங்ஸை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பந்துவீச்சு கூட்டணி
பந்துவீச்சை பொறுத்தவரை ஜஸ்பிரித் பும்ரா அணியின் வேகப்பந்து வீச்சு படைக்கு தலைமை தாங்குகிறார். அவருடன் அர்ஷ்தீப் சிங் மற்றும் இளம் வீரர் ஹர்ஷித் ராணா ஆகியோர் வேகப்பந்து வீச்சாளர்களாக இடம் பிடித்துள்ளனர். சுழற்பந்து வீச்சில் குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, அக்சர் படேல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். டி20 உலக கோப்பை விரைவில் வரும் நிலையில், இந்த தொடர் வீரர்களுக்கு மிக முக்கியமானதாக அமையும்.
இந்திய டி20 அணி விவரம்
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, அக்சர் படேல், ஜித்தேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, வாஷிங்டன் சுந்தர்.
About the Author
RK Spark