IND vs SA: `358 அடிச்சும் பத்தல' சொதப்பல் பவுலிங்; வீணான ருத்துராஜ், கோலி சதம்; ஈஸியாக வென்ற தெ.ஆ

இந்தியா vs தென்னாப்பிரிக்கா இரண்டாவது ஒருநாள் போட்டி ராய்பூரில் இன்று நடைபெற்றது.

முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியில் ஆடிய ரியான் ரிக்கில்டன், சுப்ராயன், பார்ட்மன் ஆகியோர் பென்ச்சில் உட்காரவைக்கப்பட்டு, டெம்பா பவுமா, கேஷவ் மகாராஜ், லுங்கி இங்கிடி ஆகியோர் இன்றைய போட்டியில் களமிறக்கப்பட்டனர்.

இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா கேப்டன் பவுமா பவுலிங்கைத் தேர்வு செய்தார்.

ருத்துராஜ் கெய்க்வாட்
Ruturaj Gaikwad

அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியில், கடந்த போட்டியில் அரைசதமடித்த ரோஹித் சர்மா 14 ரன்களில் அவுட்டானார்.

அவரைத் தொடர்ந்து ஜெய்ஸ்வால் இந்தப் போட்டியிலும் பெரிதாக ரன் அடிக்காமல் 22 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் தந்தார்.

பவர்பிளே முடிவில் 66 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இந்தியா இழந்திருந்தது. இந்த நேரத்தில் கோலியுடன் இணைந்தார் ருத்துராஜ் கெய்க்வாட்.

இருவருமே தென்னாப்பிரிக்காவின் பவுலிங்கை நாலாபுறமும் சிதறடித்து அரைசதம் அடித்து பார்ட்னர்ஷிப்பையும் 100 ரன்களைக் கடக்க வைத்தனர்.

தொடர்ந்து இருவரும் போட்டி போட்டு அதிரடியாக ஆட, ருத்துராஜ் 77 பந்துகளில் ஒருநாள் போட்டி கரியரில் தனது முதல் சதத்தை அடித்தார்.

அடுத்த ஒரு ஓவரிலேயே ருத்துராஜ் அவுட்டானார். கோலி – ருத்துராஜ் ஜோடி 195 ரன்கள் குவித்தது.

அதையடுத்து, கோலியுடன் கேப்டன் கே.எல்.ராகுல் கைகோர்க்க, கோலி இந்தப் போட்டியிலும் சதமடித்து 102 ரன்களில் அவுட்டானர்.

விராட் கோலி
Virat Kohli

அவரைத்தொடர்ந்து வந்த வேகத்தில் 1 ரன்னில் வாஷிங்டன் சுந்தரும் ரன் அவுட் ஆனார்.

அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தாலும் கே.எல். ராகுல் அதிரடியாக ஆடி அரைசதம் கடந்தார். 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 358 ரன்கள் குவித்தது இந்தியா.

கடந்த போட்டியில் 350 என்ற டார்கெட்டுக்கு நெருக்கமாக வந்து வெறும் 17 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த தென்னாப்பிரிக்கா, இப்போட்டியில் 359 ரன்கள் டார்கெட்டை வெற்றிகரமாக செஸ் செய்யும் நோக்கில் களமிறங்கியது.

ஒருமுனையில் எய்டன் மார்க்ரம் நல்ல அடித்தளம் போட ஆரம்பிக்க, மறுமுனையில் குயின்டன் டிகாக் 8 ரன்களில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்.

ஆனால் அவரின் விக்கெட்டுக்குப் பிறகுதான், மார்க்ரமும், பவுமாவும் சேர்ந்து இந்திய பவுலர்களுக்கு தொல்லை கொடுக்க ஆரம்பித்தனர்.

இந்த பார்ட்னர்ஷிப் 100 ரன்களைக் கடக்க, அரைசதம் கடப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட பவுமா 46 ரன்களில் பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் அவுட்டானார்.

எய்டன் மார்க்ரம்
Aiden Markram

அடுத்து வந்த மேத்யூ பிரீட்ஸ்கே மார்க்ரமுக்கு உறுதுணையாக ஆட மார்க்ரம் சதமடித்தார். ஆனால், சதமடித்த வேகத்திலேயே ஹர்ஷித் ராணா பந்துவீச்சில் மார்க்ரம் அவுட்டானார்.

இந்த நேரத்தில் களமிறங்கிய அதிரடி வீரர் டெவால்ட் பிரேவிஸ் வேகமாக ரன்களைக் குவிக்கத் தொடங்கினார்.

யாராலும் நிறுத்த முடியாத அளவுக்கு சிக்ஸர்களாகப் பறக்கவிட்ட பிரேவிஸ் 33 பந்துகளில் 5 சிக்ஸர்களுடன் அரைசதம் கடந்தார்.

ஆனால், குல்தீப் ஓவரில் அடுத்த பந்தையும் சிக்ஸர் அடிக்க முயன்று ஜெய்ஸ்வாலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இருப்பினும் தென்னாப்பிரிக்காவின் ரன் வேகம் குறையவில்லை. பிரீட்ஸ்கே தேவையான இடத்தில் பவுண்டரிகள் அடித்து அரைசதம் கடந்தார்.

தென்னாப்பிரிக்காவின் ஸ்கோர் 4 விக்கெட்டுகளுக்கு 300-ஐக் கடந்த சென்றுகொண்டிருந்த வேளையில், பிரீட்ஸ்கேயை 68 ரன்களில் எல்.பி.டபிள்யு முறையில் அவுட்டாக்கினார் பிரசித்தி கிருஷ்ணா.

அடுத்து வந்த மார்கோ யான்செனை 2 ரன்களில் அர்ஷ்தீப் அவுட்டாக்கவே ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

தென்னாப்பிரிக்காவின் வெற்றிக்கு 31 பந்துகளில் 31 தேவை என்ற சூழலில் டோனி டி சார்ஸி ரன் ஓடுகையில் எதிர்பாராத விதமாக தசைப்பிடிப்பு ஏற்பட்டு களத்திலிருந்து வெளியேறினார்.

பிரேவிஸ் - பிரீட்ஸ்கே
Dewald Brevis – Matthew Breetzke

கேஷவ் மகராஜ் களத்துக்குள் வந்தார். அப்போது ஆல்ரெடி கிரீஸில் இருந்த கார்பின் போஷ் கடந்த போட்டியைப் போலவே இப்போட்டியிலும் இந்தியாவை அச்சுறுத்தத் தொடங்கினர்.

தென்னாப்பிரிக்காவுக்கு கடைசி 5 ஓவர்களில் 27 ரன்கள் தேவைப்பட்டது. ஹர்ஷித் ராணா வீசிய 46-வது ஓவரில் போஷ் பவுண்டரி அடிக்க அந்த ஓவரில் எளிதாக 9 ரன்கள் வந்தது.

அப்படியே அழுத்தம் இந்தியாவின் பக்கம் திரும்பு வேளையில் அர்ஷ்தீப் உள்ளே வந்து 47-வது ஓவரில் வெறும் 3 ரன்களை மட்டும் கொடுத்து கட்டுப்படுத்தினார்.

அதற்கடுத்த ஓவரில் போஷும், மகாராஜும் நிதானமாக சிங்கிள் சிங்கிளாக ஓடியே 7 ரன்களை சேர்த்தனர். தென்னாப்பிரிக்காவுக்கு கடைசி 12 பந்துகளில் வெறும் 8 ரன்கள் மட்டுமே தேவைப்பட அவர்கள் இருவரும் 49-வது ஓவரில் பதட்டமே படாமல் எந்த ரிஸ்க்கும் எடுக்காமல் நீதமாக 5 ரன்கள் சேர்த்தனர்.

கடைசி ஓவரில் வெறும் 3 ரன்கள் தேவைப்பட அதை முதல் இரு பந்திலேயே எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் ஒருநாள் தொடரை 1 – 1 என தென்னாப்பிரிக்கா சமன் செய்திருக்கிறது. டிசம்பர் 6-ம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெறும் கடைசிப் போட்டியில் வெற்றிபெறும் அணி தொடரை வெல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.