இந்திய கிரிக்கெட் அணியின் அனுபவ வேகப்பந்து வீச்சாளரும், ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்காக திறம்பட செயல்பட்டவருமான மோகித் சர்மா, அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 37 வயதான இவர், சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட உருக்கமான பதிவின் மூலம் தனது 14 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 2026 ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியால் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Add Zee News as a Preferred Source
ICYMI
Mohit Sharma announced his retirement from all forms of cricket pic.twitter.com/xmO1Umnia6
— Cricbuzz (@cricbuzz) December 3, 2025
சர்வதேசப் பயணம்
2013 ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான மோகித் சர்மா, மகேந்திர சிங் தோனியின் நம்பிக்கைக்குரிய பந்துவீச்சாளராக வலம் வந்தார். குறிப்பாக 2015 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலக கோப்பையில் இந்திய அணி அரையிறுதி வரை சென்றதில் இவரது பங்கு மிக முக்கியமானது. அந்த தொடரில் சிறப்பாக பந்துவீசிய அவர் 13 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். மொத்தமாக இந்திய அணிக்காக 26 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 31 விக்கெட்டுகளையும், 8 டி20 போட்டிகளில் விளையாடி 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
ஐபிஎல் நாயகன்
மோகித் சர்மாவின் கிரிக்கெட் வாழ்க்கையில் ஐபிஎல் தொடர் மிக முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. 2013 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்த அவர், தனது துல்லியமான பந்துவீச்சால் அனைவரையும் கவர்ந்தார். 2014 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் 23 விக்கெட்டுகளை வீழ்த்தி Purple Cap வென்று சாதனை படைத்தார். இடைப்பட்ட காலங்களில் ஃபார்ம் அவுட் மற்றும் காயங்களால் அவதிப்பட்ட அவர், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்காக விளையாடினார்.
பின்னர் 2023 ஆம் ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணியில் நெட் பவுலராக இணைந்து, பின்னர் அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளராக உருவெடுத்தது ஒரு மிகப்பெரிய Comeback கதையாக பார்க்கப்படுகிறது. அந்த சீசனில் குஜராத் அணி இறுதிப்போட்டி வரை செல்ல இவரது பந்துவீச்சு முக்கிய காரணமாக அமைந்தது. ஐபிஎல் வரலாற்றில் மொத்தம் 120 போட்டிகளில் விளையாடியுள்ள மோகித் சர்மா, 134 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். அவரது எகானமி ரேட் 8.77 ஆகும்.
உருக்கமான ஓய்வு அறிக்கை
தனது ஓய்வு குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள மோகித் சர்மா, “இன்று கனத்த இதயத்துடன் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுகிறேன். ஹரியானா மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்தியது முதல் இந்திய அணியின் ஜெர்சியை அணிந்தது மற்றும் ஐபிஎல் தொடர்களில் விளையாடியது வரை, இந்த பயணம் எனக்கு கிடைத்த ஒரு பெரிய ஆசீர்வாதம். எனது கேரியரின் முதுகெலும்பாக இருந்த ஹரியானா கிரிக்கெட் சங்கத்திற்கும், பிசிசிஐக்கும், எனது பயிற்சியாளர் அனிருத் சாருக்கும், எனது மனைவி மற்றும் குடும்பத்தினருக்கும் மனமார்ந்த நன்றிகள். ஆட்டம் முடிந்தது, நன்றிகள் என்றும் தொடரும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
About the Author
RK Spark