திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான பிரச்னை எழுந்துள்ள நிலையில், மதநல்லிணக்கத்தைப் போற்றும் வகையில், திருப்பூர் அருகே உள்ள ஒரு தர்காவில் கார்த்திகை தீபம் ஏற்றி வழிபாடு நடைபெற்று வருவது ஆச்சர்யத்தை அளித்துள்ளது. திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே கானூர் ஊராட்சி உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள தக்னி சுன்னத் ஜமாத் மஸ்ஜித் முஹம்மத் ஷா வலி தர்கா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த தர்கா தமிழ்நாடு வஃக்பு வாரியத்தின்கீழ் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆண்டுதோறும் சந்தனக்கூடு உருஷ் விழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த சந்தனக்கூடு உருஷ் விழாவில் சென்னை, கர்நாடக மாநிலம் மைசூர், கோவை, திருப்பூர், ஈரோடு, சத்தியமங்கலம் மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கானோர் வருகை தந்து தொழுகையில் ஈடுபடுவது வழக்கம். அதுமட்டுமன்றி கானூர் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த மக்கள் மதபேதமின்றி இந்த தர்காவுக்குச் சென்று வழிபடுவது வழக்கம். இந்நிலையில், இந்த தர்காவில் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில், கார்த்திகை தீபம் ஏற்றி வழிபட்ட நெகிழ்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.

இது குறித்து தர்கா நிர்வாகிகள் கூறுகையில், “தொழில் விருத்தி, திருமணம், குழந்தை பாக்கியம் என எந்தவொரு வேண்டுதல் வைத்தாலும் நிறைவேறுவதால் இந்த தர்காவிற்கு மத பேதமின்றி அனைத்து தரப்பு மக்களும் இங்கு வந்து வழிபடுகின்றனர். மேலும், கார்த்திகை தீபத்தின்போது இப்பகுதியைச் சேர்ந்த மக்கள் இங்கு வந்து கார்த்திகை தீபம் ஏற்றுவது ஆண்டுதோறும் வழக்கம். மத நல்லிணக்கத்துக்கு உதாரணமாக இந்த தர்கா விளங்குகிறது. ஆண்டுதோறும் நடைபெறும் சந்தனக்கூடு உரூஸ் விழாவில் அனைத்து தரப்பு மக்களும் வருகை தந்து வழிபட்டு செல்கின்றனர். கார்த்திகை தீப திருநாளை ஒட்டி புதன்கிழமை மாலை விளக்கேற்றப்பட்டது. தொடர்ந்து வியாழக்கிழமையும், வெள்ளிக்கிழமையும் தீபம் ஏற்றப்படும்” என்றனர். தர்காவில் ஏற்றப்பட்ட கார்த்திகை தீபத்தை கிராம மக்கள் ஏராளமானோர் வழிபாடு நடத்திச் சென்றனர்.