தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் ஏற்கனவே வின்ஃபாஸ்ட் கார்கள் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில் கூடுதலாக மின்சார பேருந்து மற்றும் ஸ்கூட்டர் தயாரிப்பதற்கு தமிழ்நாடு அரசுடன் ஒரு புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்படி, தூத்துக்குடி சிப்காட் தொழிற்பூங்காவில், ஏற்கனவே உள்ள வின்ஃபாஸ்ட் ஆலைக்கு அருகாமையில் கூடுதலாக 500 ஏக்கர் நிலத்தை அரசு ஒதுக்கீடு செய்யவுள்ளது. எலக்ட்ரிக் கார்களில் கவனம் செலுத்தி வந்த வின்ஃபாஸ்ட், இந்த புதிய ஆலையில் எலக்ட்ரிக் பேருந்துகள் மற்றும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரிக்கவும், இதற்காக பிரத்யேக தயாரிப்பு கூடங்கள் மற்றும் சோதனை மையங்கள் அமைக்கவும் உள்ளது.
வின்ஃபாஸ்டின் ஒட்டுமொத்த 2 பில்லியன் டாலர் (ரூ.16,000 கோடி) முதலீட்டுத் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக, சுமார் ஏறக்குறைய ₹4,200 கோடி) முதலீடு செய்யவுள்ளது.
தமிழ்நாடு அரசு இந்தத் திட்டத்திற்குத் தேவையான மின்சாரம், தண்ணீர், சாலை வசதிகள் மற்றும் கழிவு மேலாண்மை போன்ற உள்கட்டமைப்புகளை ஏற்படுத்தித் தரவும், மாநிலக் கொள்கைகளின்படித் தேவையான மானியங்கள் மற்றும் சலுகைகளையும் வழங்கும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் திரு. டி.ஆர்.பி ராஜா அவர்கள் பேசுகையில், “வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் இந்த புதிய எலக்ட்ரிக் பஸ் மற்றும் ஸ்கூட்டர் தயாரிப்புத் திட்டம், இந்தியாவின் பசுமைப் போக்குவரத்து கொள்கைக்கு மிகப்பெரும் உந்துசக்தியாக இருக்கும்” என்று பாராட்டியுள்ளார்.