AVM Saravanan: “ஏவிஎம் ஸ்டுடியோஸ் எனக்கு பயிற்சி மையமா இருந்துருக்கு.!"- விஷால் இரங்கல்

தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒன்று ஏவிஎம் தயாரிப்பு நிறுவனம். ஏ.வி. மெய்யப்ப செட்டியாரால் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தை அவருக்கு பிறகு பொறுப்பு எடுத்து நிர்வகித்தவர் ஏ.வி.எம் சரவணன்.

ஏராளமான வெற்றி படங்களை இந்த தயாரிப்பு நிறுவனம் கொடுத்திருக்கிறது. இந்நிலையில் 86 வயதான ஏ.வி.எம் சரவணன் வயது மூப்பு காரணமாக இன்று (டிச.4) உயிரிழந்திருக்கிறார்.

ஏ.வி.எம் சரவணன்
ஏ.வி.எம் சரவணன்

இவரது மறைவிற்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் நடிகர் விஷால் இவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “ஏவிஎம் ஸ்டுடியோஸ் எனும் புரட்சிகர நிறுவனத்தின் பின்னணியில் இருந்த புரட்சி திரைப்பட தயாரிப்பாளர் ஏ.வி.எம் சரவணன் சாரின் மறைவு செய்தியைக் கேள்விப்பட்டவுடன் மிகுந்த துயரம் அடைந்தேன்.

என் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து, அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இன்று நான் திரைப்படத் துறையில் இருப்பதற்கு ஏவிஎம் ஸ்டுடியோ எனக்கு ஒரு பயிற்சி மையமாக இருந்திருக்கிறது.

ஒவ்வொரு தயாரிப்பாளரும் உங்கள் நேர்மையும், உழைப்பும், அர்ப்பணிப்பையும் பார்த்து கற்றுக்கொண்டார்கள்.

ஏ.வி.எம் சரவணன்
ஏ.வி.எம் சரவணன்

உங்கள் படங்களுக்கு மட்டுமல்லாது , முழு திரைப்படத் துறைக்காக நீங்கள் காட்டிய அர்ப்பணிப்பு அனைவருக்கும் முன்மாதிரியாக இருந்தது.

இன்று இந்தியத் திரைப்படத் துறையில் பெரும் ஆளுமையை இழந்த துயரநாளாக இருக்கிறது.

உங்கள் நினைவுகள் எப்போதும் எங்களின் மனதில் நிலைத்து நிற்கும். உங்கள் படங்கள் என்றும் புதுமுக இயக்குநர்களுக்குப் பயிற்சி தளமாக இருக்கும்.

இந்த மிகக் கடினமான நேரத்தில், அவரின் குடும்பத்தினருக்கு இறைவன் அதிக வலிமையையும் ஆறுதலையும் வழங்கட்டும்” என்று இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.