திருப்பரங்குன்ற மலையில் கடந்த டிசம்பர் 3ம் தேதி கார்த்திகை திருநாளன்று, வழக்கம்போல கடந்த பல ஆண்டுகளாக ஏற்றப்பட்டுவந்த கோவிலுக்கு மேலே இருக்கும் மலையில் உச்சிப் பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டது.
இந்த ஆண்டு இந்து அமைப்புகள் மலை உச்சியில், சிக்கந்தர் தர்காவுக்கு அருகே இருக்கும் தீபத்தூணில் மகா தீபம் ஏற்ற உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்து அனுமதி பெற்றிருந்தனர். நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனும் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றவும் உத்தரவிட்டிருந்தார்.

ஆனால், மலை உச்சியில் இருக்கும் தீபத்தூணில் யாருக்கும் அனுமதி கொடுக்கவில்லை என மறுத்தது தமிழ்நாடு காவல்துறை.
இதை மீறி மலை உச்சிக்குச் செல்ல முயற்சி செய்த இந்து அமைப்பினர் தடுக்கப்பட்டதால் காவல்துறை – இந்து அமைப்பினரிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. காவல்துறையினர் மீது சிலர் தாக்குதலும் நடத்தினர்.
இந்தப் பதற்றமான சூழலில் அன்று மதுரை மாவட்ட ஆட்சியரால் 144 உத்தரவு போடப்பட்டு இப்பிரச்னை அன்று முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.
தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளதால், திருப்பரங்குன்றம் மலைத்தூணில் தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை 9-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார்த்திகை முடிந்தாலும் பரவாயில்லை திருப்பரங்குன்ற மலை உச்சி தீபத்தூணில் விளக்கு ஏற்றியாக வேண்டும் என இந்து அமைப்புகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில், “கார்த்திகை நாள் அன்று மலையில் உச்சிப் பிள்ளையார் கோயிலில் எப்போதும் போல தீபம் ஏற்றப்பட்டது. மற்ற நாட்களில் மலையில் தீபம் ஏற்றும் வழக்கம் இல்லை” என்று அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் பட்டர்கள் கோவில் ஆணையருக்கு கடிதம் எழுதி இருக்கிறார்கள்

அதில், “சிவாகமங்களில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவானது சொல்லப்பட்டிருக்கின்றது. அத்தகைய திருக்கார்த்திகையன்று அதிவாசங்களுடன் கூடிய தீபத்தை திருக்கோவில் கோபுரங்கள், மண்டபங்கள், பிரகாரங்கள், திருக்கோவில் சமீபத்தில் உள்ள மலைகள், கிரிவலப் பாதைகள் ஆகிய இடங்களில் தீபம் ஏற்றுவது சிறந்த பலன்களாக அமைகின்றது.
மேலும் கார்த்திகை மாதம் வருகின்ற கார்த்திகை நட்சத்திரத்திலோ அல்லது பௌர்ணமியிலோ தீபம் ஏற்றுவது உத்தர காமிகாகமத்தில் கூறப்பட்டுள்ளது. இதர நாட்களில் செய்யப்படுவது விஷேடமாக சொல்லப்படவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.


அருள்மிகு ஆண்டவர் சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் துணை ஆணையர் | நிர்வாக அதிகாரி அவர்களுக்கு திருக்கோயில் ஸ்தானீக பட்டர்கள் எழுதிக்கொண்டது.
இந்த ஆண்டும் 03.12.2025 புதன்கிழமை அன்று மாலை 6 மணியலவில் இத்திருக்கோவில் வழக்கப்படி திருக்கோவிலுக்குள் பால தீபம் ஏற்றிய உடன் அதே நேரத்தில் வழக்கமாக ஏற்றக்கூடிய உச்சிபிள்ளையார் கோவிலில் தீபமண்டபத்தில் தீபம் ஏற்றப்பட்டு பின்பு சுவாமி புறப்பாடாகி, பதினாறுகால் மண்டபம் எதிரே உள்ள இடத்தில் சொக்கமாண் ஏற்றி சுவாமிக்கு சாற்றப்பட்டது என்ற விபரத்தினை இதன் மூலம் தெறிவித்துக்கொள்கிறோம்.
மற்ற நாட்களில் மலை மீது தீபம் ஏற்றும் வழக்கம் இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று கூறப்பட்டிருக்கிறது.