`100 பில்லியன் டாலர் டார்கெட்; மேக்இன் இந்தியா; புதிய வர்த்தக வழித்தடங்கள்'- புதின் விசிட் ஹைலைட்ஸ்

உக்ரைன் மீது ரஷ்யா போர் (2022) தொடங்குவதற்கு முந்தைய ஆண்டு (2021) கடைசியாக இந்தியா வந்த ரஷ்ய அதிபர் புதின், நான்காண்டுகளுக்குப் பிறகு இரண்டு நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தடைந்தார்.

அவரின் வருகையைத் தொடர்ந்து டெல்லியில் ரஷ்யா – இந்தியா 23-வது உச்சி மாநாடு இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டுக்குப் பின்னர் புதினும், பிரதமர் மோடியும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய ரஷ்ய அதிபர் புதின்,

ரஷ்ய அதிபர் புதின் - இந்திய பிரதமர் மோடி
ரஷ்ய அதிபர் புதின் – இந்திய பிரதமர் மோடி

2030-க்குள் 100 பில்லியன் டாலர் வர்த்தகம்!

“அரசுகளுக்கிடையேயான மற்றும் நிறுவனங்களுக்கு இடையேயான ஒப்பந்தங்களின் ஈர்க்கத்தக்க தொகுப்பில் இருதரப்பும் (ரஷ்யா – இந்தியா) கையெழுத்திட்டுள்ளன.

அவை பெரும்பாலானவை பொருளாதாரக் கூட்டுறவை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. கடந்த ஆண்டு இருதரப்பு வர்த்தகம் 64 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டியது. இது முந்தைய காலகட்டத்தை விட 12 சதவிகிதம் அதிகம்.

இரு தரப்பும் அதை 100 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்த இலக்கு வைத்துள்ளது. அந்த இலக்கை அடைய 2030 வரை ரஷ்ய – இந்திய பொருளாதார கூட்டுறவு திட்டத்தில் எங்கள் அணுகுமுறையை நாங்கள் ஒத்திசைத்துள்ளோம்.

இரு நாடுகளும் தங்களின் தேசிய நாணயங்களை பெருமளவில் பயன்படுத்துகின்றன. 96 சதவிகித பரிவர்த்தனைகள் ரூபாய் மற்றும் ரூபிள்களில் நடத்தப்படுகின்றன.

புதின் - மோடி
புதின் – மோடி

இந்தியாவின் அதிகரித்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்ய கச்சா எண்ணெய், எரிவாயு, நிலக்கரி ஆகியவற்றின் நம்பகமான சப்ளையராக ரஷ்யா உள்ளது. இந்தியாவில் மிகப்பெரிய அணுமின் நிலையத்தை உருவாக்குவதற்கான ஒரு முதன்மைத் திட்டத்தை ரஷ்யா உருவாக்கி வருகிறது.

ரஷ்யாவும் இந்தியாவும் புதிய வர்த்தக வழித்தடங்களை நிறுவ இணைந்து செயல்படுகின்றன. இது, ரஷ்யா மற்றும் பெலாரஸிலிருந்து இந்தியப் பெருங்கடலுக்கு சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து வழித்தடம் (INSTC) வழித்தடத்தை உருவாக்க புதிய பயனுள்ள சர்வதேச போக்குவரத்து தளவாட வழித்தடங்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

‘மேக் இன் இந்தியா’ திட்டத்துக்கு ரஷ்யா சப்போர்ட்!

தொழில், இயந்திரம், உற்பத்தி, டிஜிட்டல் தொழில்நுட்பங்கள், ஆராய்ச்சி ஆகியவற்றில் நாங்கள் கூட்டு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.

பிரதமர் மோடியின் தனித்துவமான திட்டமான ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கட்டமைப்பில் ரஷ்யா தனது தொழில்துறை பொருள்களின் உற்பத்தியையும் நிறுவும்.

புதின் - மோடி
புதின் – மோடி

ஜனநாயகப் பன்முக உலக ஒழுங்கை ஊக்குவித்தல், ஐ.நா சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சர்வதேச சட்டத்தின் கொள்கைகளைப் பாதுகாத்தல் என ரஷ்யாவும் இந்தியாவும் சுதந்திரமான மற்றும் தன்னிறைவு பெற்ற வெளியுறவுக் கொள்கையைக் கடைப்பிடிக்கின்றன.

இந்தியா அடுத்த ஆண்டு பிரிக்ஸ் (BRICS) தலைமைப் பொறுப்பை ஏற்கும்போது இந்தியாவை ரஷ்யா முழுமையாக ஆதரிக்கும்.

தற்போதைய வருகையும், கையெழுத்தான ஒப்பந்தங்களும் ரஷ்யா – இந்தியா மூலோபாய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த உதவும் என்று என்னால் நம்பிக்கையுடன் தெரிவிக்க முடியும்” என்று கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.