ஏவி.எம்.சரவணன்: `என்னமோ மனசு கேட்கல; மயானம் வரை போய்.!’ – கலங்கிய சிவகுமார்

ஏவி.எம்.சரவணன் மறைந்த அன்று, அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த நடிகர் சிவகுமார், கண்கலங்கி நின்றார். அவரின் மேல் கொண்ட அன்பு, சிவகுமாரை சுற்றி நின்ற அனைவராலும் அன்று உணரப்பட்டது. “அவரோட நியாபகமாதான் என் மகன் சூர்யாவுக்கு சரவணன்னு பேர் வச்சேன்” என்றும் பேசி என் அன்பை வெளிப்படுத்தினார். அவரிடம் நாம் ஏவி.எம்.சரவணன் அவர்களுடனான பயணம் குறித்து பேசினோம்…

இனி சிவகுமார் அவர்களின் வரிகளில்…

“சிவாஜி, கமல்ஹாசனை அறிமுகம் செய்த ஏவி.எம் நிறுவனம் தான் என்னையும் அறிமுகம் செய்தது. முதன் முதலில் நான் நடித்த காதல் காட்சிகளை பார்த்த செட்டியார், ஜோடி பொருத்தம் சரியில்லை என்று சொல்லி நீக்கி விட்டதாக சொன்னார்கள். நான் தனிமையில் கதறி அழுதேன். அப்போது என் தோளில் ஆதரவாக விழுந்த கரத்துக்கு சொந்தக்காரர், சரவணன்.

பராசக்தி படத்துக்கு பின்னர் நீண்ட இடைவெளிக்கு பிறகு சிவாஜி நடித்த `உயர்ந்த மனிதன்’ படத்தில் என்னை சிவாஜி மகனாக நடிக்க வைத்து சிறப்பு செய்தார். அன்று ஆரம்பித்த நட்பு நேற்றுவரை தொடர்ந்தது.

ஏவி.எம்.சரவணன் | சிவகுமார்

ஏவி. எம் நிறுவனம் எடுத்த 175 படங்களில் நடிக்காத நடிகர் நடிகைகளே இல்லை என்று சொல்லலாம். V.K ராமசாமி, ஏவி. எம்.ராஜன், என்று பன்முக திறமை கொண்ட கலைஞர்களை அறிமுகப்படுத்தியது.

காஞ்சனாவுக்கு பெருமை சேர்த்தது. அதனால் தான் ஆட்டோ பிடித்து ஓடிவந்து அஞ்சலி செலுத்தினார். கே.ஆர்.விஜயாவும் பல படங்களில் நடித்துள்ளார். அவரும் சரவணன் சாருக்கு இறுதி மரியாதை செய்தார்.

அவருக்கு A.C. திருலோக சுந்தர், S.P. முத்துராமன் இருவரும் நெருங்கிய நண்பர்கள். குறிப்பாக் திருலோக சுந்தர் அவர்களிடம் மட்டுமே ஏனோ மனம்விட்டு சிரித்துப் பேசுவார்.

இருவரும் வாரத்துக்கு ஒருமுறை ஏவி. எம். ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் சந்திப்பார்கள்.

காலை முதல் இரவு வரை பேசிக் கொண்டிருப்பார்கள். அதன்பிறகு ஈ.சி.ஆர் இடத்தில் தனது வீட்டுக்கு போய் விடுவார், திருலோக சுந்தர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் இறந்த போதே மனிதர் ரொம்பவும் உடைந்து போனார்.

ஏ.வி.எம் சரவணன்
ஏ.வி.எம் சரவணன்

ரஜினிக்கு முரட்டுக்காளை முதல் சிவாஜி வரை பத்துக்கும் மேற்பட்ட வெற்றிப் படங்கள் வெளியாகியுள்ளன. கமலுக்கு சகலகலா வல்லவன், தூங்காதே தம்பி தூங்காதே, உயர்ந்த உள்ளம் , பேர் சொல்லும் பிள்ளை என்று ஏகப்பட்ட படங்களை எடுத்தார்.

என் மகன் சூர்யாவுக்கு அயன், பேரழகன் என்று முக்கிய படங்களை எடுத்துக் இருக்கிறார். பழனிசாமியாக இருந்த என்னை சிவகுமார் என்று பேர் வைத்தார். நான் அவர் நினைவாக என் மகனுக்கு சரவணன் என்று பேர் வைத்தேன். என்னிடம் வாரத்துக்கு இரண்டு நாள் தவறாமல் பேசி விடுவார். கடந்த 10 நாட்களாக ஏனோ பேசவே இல்லை.

காலமான செய்தி கேட்டவுடன் காலையில் சூர்யாவுடன் வந்து அஞ்சலி செலுத்தினேன். அதன்பிறகு வீட்டிற்கு போன எனக்கு மனசு கேட்கவில்லை. மறுபடியும் தகனம் செய்ய செல்லும் முன்பு தனியாக வந்தேன். நானும், எஸ். பி. முத்துராமன் சாரும் சேர்ந்து மயானம் சென்றோம். அங்கே சரவணன் சார் உடல் தகனம் செய்யும் வரை கலங்கி நின்றோம். ஒரு காலத்தில் ஏவி. எம். ஸ்டுடியோவை கட்டி ஆண்டவர் உடலை, ஏவி. எம் மயானத்தில் நெருப்பு கொழுந்துவிட்டு எரித்துக் கொண்டு இருந்தது.” என்றார் வேதனையுடன்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.