வித்தியாசமான கண்டுபிடிப்புகளுக்குப் பெயர்போன ஜப்பான், புதிய ‘கியூப்’ வடிவ பாலை அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பொதுவாக, பச்சிளங் குழந்தைகளுக்குத் தாய்ப்பாலுக்கு மாற்றாக ‘ஃபார்முலா மில்க்’ பவுடர் வடிவத்தில் கொடுக்கப்படும்.
இதைப் பயன்படுத்துவது சில நேரங்களில் சவாலான விஷயமாக இருக்கும். குறிப்பாக நள்ளிரவு 2 மணி அல்லது 3 மணிக்குக் குழந்தை பசியால் அழும்போது, தூக்க கலக்கத்தில் இருக்கும் பெற்றோர்கள் சரியான அளவில் பவுடரை அளந்து, வெதுவெதுப்பான நீரில் கலக்குவது சிரமமாக இருக்கும். பல நேரங்களில் பவுடர் கீழே சிந்திவிடும் அல்லது அளவுகள் மாறிவிடும்.
இதனால் ஜப்பானைச் சேர்ந்த பிரபல நிறுவனமான ‘மெய்தி’ (Meiji), பவுடருக்குப் பதிலாகத் திட வடிவிலான ‘கியூப்’களை உருவாக்கியுள்ளது.
பார்ப்பதற்குச் சர்க்கரைத் துண்டுகள் போலவே இருக்கும் இவை, தண்ணீரில் போட்டவுடன் உடனடியாகக் கரைந்துவிடும் தன்மையுடையவையாக உள்ளது.

இது எப்படி வேலை செய்கிறது?
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோவின்படி, ஒருவர் இந்த கியூப்களை எப்படிப் பயன்படுத்துவது என்று விளக்குகிறார். ஒரு கியூப் என்பது 40 மி.லி பாலுக்குச் சமம். அதாவது ஒரு கியூபை பாட்டிலில் போட்டு, தேவையான அளவு வெதுவெதுப்பான நீரை ஊற்றி ஆட்டினால் போதும், பால் தயாராகிவிடும்.
ஸ்பூன் கணக்கு, சிந்தும் கவலை, அளவு போன்ற எந்தப் பிரச்னையும் இதில் இல்லை என்று அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.