வாஷிங்டன்,
அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றதை தொடா்ந்து ‘அமெரிக்கா முதலில்’ என்ற கொள்கையை பின்பற்ற தொடங்கினார். மேலும் இந்தியா மீதான வன்மத்தை ஆரம்பம் முதலே தொடர்ந்தார். குறிப்பாக இந்தியா மீது அதிகபட்சமாக 50 சதவீதம் இறக்குமதி வரிவிதிப்பு, சட்டவிரோதமாக குடியேறியதாக கூறி இந்தியர்களை கைவிலங்கிட்டு நாடு கடத்தியது, இந்தியர்கள் அதிகம் பெறும் அமெரிக்காவின் எச்-1பி விசா கட்டணத்தை ரூ.90 லட்சமாக (1 மில்லியன் டாலர்கள்) உயர்த்தி அறிவித்தது உள்ளிட்ட பல்வேறு சங்கடங்களை கொடுத்தார்.
இதனால் அமெரிக்காவுக்கான ஏற்றுமதி, அமெரிக்காவில் இருந்து சம்பாதித்து அனுப்பப்படும் பணம் உள்ளிட்டவை சரிந்து பொருளாதாரம் வெகுவாக பாதித்தது. இருப்பினும் இதையும் இந்தியா கண்டுக்கொள்ளாமல் முன்னேறி வருகிறது. குறிப்பாக இந்த நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் அமெரிக்க தடைகளை கடந்து 7.3 சதவீதமாக உயரும் என மத்திய ரிசர்வ் வங்கி தவிர்த்து அமெரிக்க நிறுவனங்களும் கணித்துள்ளன.
இத்தகைய உலக அரசியல் சூழலில் ரஷிய அதிபர் புதின் அரசுமுறை பயணமாக இந்தியா வந்து சென்றார். இந்தியா, ரஷியா உடன் அமெரிக்கா பகைமை பாராட்டி வரும்நிலையில் புதினின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. அதற்கேற்றாற்போல ரஷிய அதிபர் புதினும் இந்தியா கூட்டாளி என்கிற அந்தஸ்தை கடந்து எங்களுடைய நீண்டகால நண்பராக திகழ்ந்து வருகிறது. இந்தியாவின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு தேவையான அனைத்து உதவிகளை செய்ய தயாராக இருப்பதாக புதின் அறிவித்தார்.ஒருநாட்டின் பொருளாதாரம் அதன் ஆற்றல், ராணுவம், வர்த்தகம் அதற்கான மூலப்பொருட்களை உள்ளடக்கியது. இந்தியா போன்ற பெரிய மக்கள்தொகை கொண்ட நாட்டிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் ரஷிய அதிபர் புதின் அளிப்பதாக கூறியது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை கதிகலங்க செய்துவிட்டது.
இந்தநிலையில் அமெரிக்கா புதிய தேசிய பாதுகாப்பு கொள்கை என்ற பெயரில் தமது கொள்கையை திருத்தி வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவை முக்கிய கூட்டாளி நாடாக அறிவித்துள்ளது. வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் உலக பொருளாதார வளர்ச்சி, பாதுகாப்பு நிலைத்தன்மை, தொழில்நுட்ப முன்னேற்றம் அகியவற்றில் இந்தியா முக்கிய சக்தியாக உள்ளது. அதனால் இந்தியாவுடன் நீண்டகால நட்புறவை வலுப்படுத்துவது, அமெரிக்காவின் பாதுகாப்பு குறிக்கோளில் முக்கிய அங்கமாக இணைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே டிரம்பின் வெளியுறவு கொள்கைகளை ராணுவ தலைமையகமான பெண்டகனின் முன்னாள் அதிகாரி மைக்கேல் ரூபின் விமர்சித்துள்ளார். அவர், “இந்தியா உடனான டிரம்பின் வெளியுறவு கொள்கைகள் பெரும் பிழையை ஏற்படுத்திவிட்டது. இதனால் நீண்டகால நட்புறவில் இருந்த இந்தியாவை ரஷியா உடன் சாய செய்துவிட்டது. ரஷியா உடன் இந்தியா செயல்பட செய்ததற்காகவே டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்க வேண்டும்” என விமர்சித்தார்.