இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரருமான எம்.எஸ். தோனி, கிரிக்கெட் உலகில் மட்டுமல்லாமல் தொழில் உலகிலும் ஒரு வெற்றிகரமான முதலீட்டாளராக உருவெடுத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும், தோனியின் வருமானம் மற்றும் சொத்து மதிப்பு ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அவரது சொத்து மதிப்பு சுமார் ரூ.1000 கோடியை தாண்டியுள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு சாமானிய குடும்பத்தில் பிறந்து, இன்று ஒரு மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்யத்தையே உருவாக்கியிருக்கும் தோனியின் பிசினஸ் மாஸ்டர் பிளான் குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
Add Zee News as a Preferred Source

விவசாயம் முதல் ட்ரோன் வரை
தோனி தனது முதலீடுகளை ஒரே துறையில் முடக்காமல், பல்வேறு துறைகளில் பிரித்து முதலீடு செய்யும் விவேகமான உத்தியை கடைப்பிடிக்கிறார்.
ஆர்கானிக் விவசாயம்
ராஞ்சியில் உள்ள தனது 43 ஏக்கர் பண்ணை வீட்டில், தோனி தீவிரமாக விவசாயம் செய்து வருகிறார். அங்கு விளையும் ஸ்ட்ராபெர்ரி, தக்காளி, முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகள் மற்றும் பழங்கள் ‘ஈஜா’ (Eeja) என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகின்றன. இவை உள்ளூர் சந்தைகள் மட்டுமின்றி, துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இது தோனியின் மனதுக்கு நெருக்கமான தொழிலாகப் பார்க்கப்படுகிறது.
விளையாட்டு மற்றும் உடை
‘செவன்’ (Seven) என்ற விளையாட்டு ஆடை மற்றும் காலணி பிராண்டின் உரிமையாளராகவும், அதன் தூதராகவும் தோனி இருக்கிறார். இது தவிர, நாடு முழுவதும் ‘ஸ்போர்ட்ஸ் ஃபிட் வேர்ல்ட்’ (SportsFit World) என்ற பெயரில் 200-க்கும் மேற்பட்ட ஜிம்களை நிறுவி நடத்தி வருகிறார். இதன் மூலம் உடல்நலம் மற்றும் பிட்னஸ் துறையிலும் அவர் கால் பதித்துள்ளார்.
ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் முதலீடு
எதிர்கால தொழில்நுட்பங்களை கணிப்பதிலும் தோனி வல்லவர். குறிப்பாக, சென்னையில் செயல்படும் ‘கருடா ஏரோஸ்பேஸ்’ என்ற ட்ரோன் தயாரிப்பு நிறுவனத்தில் அவர் முதலீடு செய்துள்ளார். மேலும், ‘காத்தாபுக்’ (Khatabook), பழைய கார்களை விற்கும் ‘கார்ஸ் 24’ (Cars24) போன்ற நிறுவனங்களிலும் அவர் முக்கிய முதலீட்டாளராக உள்ளார். எலெக்ட்ரிக் சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான இ-மோட்டார்ட் (EMotorad) நிறுவனத்திலும் அவர் முதலீடு செய்துள்ளார்.
விளையாட்டு அணி
தோனிக்கு கிரிக்கெட்டை தாண்டியும் விளையாட்டின் மீது தீராத காதல் உண்டு. இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில், சென்னை மக்களின் அபிமான அணியான ‘சென்னையின் எஃப்சி’ அணியின் இணை உரிமையாளராக உள்ளார். ஹாக்கி இந்தியா லீக்கில், ‘ராஞ்சி ரேஸ்’ அணியின் உரிமையாளராகவும் உள்ளார்.
சினிமா தயாரிப்பு
‘தோனி என்டர்டெயின்மென்ட்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி, அதன் மூலம் திரைப்பட தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளார். இந்நிறுவனம் தயாரித்த முதல் திரைப்படமே தமிழில் ஹரிஷ் கல்யாண் நடித்த ‘எல்.ஜி.எம்’ (LGM) என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும், ஐபிஎல் தொடர் மூலம் அவருக்கு ஆண்டுக்கு கணிசமான வருமானம் கிடைக்கிறது. 2025 ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவரை ரூ.4 கோடிக்கு தக்கவைத்துள்ளது. இது தவிர, சுமார் 20-க்கும் மேற்பட்ட முன்னணி பிராண்டுகளுக்கு விளம்பரத் தூதராக இருப்பதன் மூலம் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார். மைதானத்தில் எப்படி ‘கூல்’ ஆக முடிவுகளை எடுத்து வெற்றிகளை குவித்தாரோ, அதேபோல தொழில் உலகிலும் நிதானமான மற்றும் சரியான முதலீடுகள் மூலம் தோனி தனது சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தி வருகிறார்.
About the Author
RK Spark