காசாவில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் தினமும் மீறுகிறது: துருக்கி, எகிப்து குற்றச்சாட்டு

தோஹா,

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே காசாவில் 2 ஆண்டுகளாக நடந்து வந்த போர், சர்வதேச சமூகத்துக்கு பெரும் மனிதாபிமான நெருக்கடியை ஏற்படுத்தியது. இஸ்ரேல் ராணுவம் நடத்திய கொடூர தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான அப்பாவி பாஸ்தீனர்கள் பலியானதுடன், உயிருடன் இருப்பவர்களுக்கும் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் பட்டினிச்சாவும் அதிகரித்தன. எனினும் நீண்ட இழுபறிக்குப்பிறகு அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் 20 அம்ச திட்டத்தை ஏற்று இரு தரப்பும் போர் நிறுத்தம் செய்ய ஒப்புக்கொண்டன. பின்னர் டிரம்ப் தலைமையில் எகிப்தில் நடந்த அமைதி மாநாட்டில் முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தமும் கையெழுத்தானது.

காசாவில் கடந்த அக்டோபர் தொடக்கத்தில் இந்த போர் நிறுத்தம் அமலுக்கு வந்தபோதும், அங்கே போர் மேகங்கள் முழுமையாக விலகவில்லை. துப்பாக்கிச்சூடும், குண்டு வீச்சும் அன்றாட நிகழ்வாகவே தொடர்கின்றன.இந்த விவகாரத்தில் இஸ்ரேல் மீது துருக்கி மற்றும் எகிப்து நாடுகள் கடுமையாக குற்றம் சாட்டி உள்ளன.கத்தார் தலைநகர் தோஹாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட துருக்கி வெளியுறவு மந்திரி ஹக்கன் பிடன் செய்தியாளர்களிடம் பேசும்போது கூறியதாவது:-

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காசாவில் தினந்தோறும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் இஸ்ரேல் பிரதமர் நேட்டன்யாகுவுடன், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மிகவும் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும்.அமெரிக்கா தலையிடாவிட்டால், இஸ்ரேலின் தினசரி போர் நிறுத்த மீறல்களால், அங்கு அமைதி திட்டத்துக்கு பெரிய ஆபத்து ஏற்படும் என அஞ்சுகிறேன்.எனவே இந்த ஆண்டு இறுதிக்குள் நேட்டன்யாகுவுடன் டிரம்ப் பேசுவார் என நினைக்கிறேன். முக்கியமாக, இந்த ஆண்டு இறுதியில் இஸ்ரேல் பிரதமர் அமெரிக்கா செல்லும்போது இந்த பேச்சுவார்த்தை நடக்கலாம்.இவ்வாறு ஹக்கன் பிடன் கூறினார்.

முன்னதாக இஸ்ரேல் மீது எகிப்து வெளியுறவு மந்திரி பதர் அப்தெல்லட்டியும் கடுமையான குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார்.இஸ்ரேலின் போர் நிறுத்த விதிமீறலை கண்காணிக்க காசா எல்லையில் அமைதிப்படையை நிறுத்த வேண்டும் என அவர் வலியறுத்தினார். இந்த கருத்தை துருக்கி வெளியுறவு மந்திரியும் வற்புறுத்தி உள்ளார். இதற்கிடையே போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் அமைப்பினர் தான் மீறுவதாகவும், இதற்கு பதிலடியாகத்தான் ராணுவம் தாக்குதல் தொடுப்பதாகவும் இஸ்ரேல் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.