இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மனதில் ஒரு மறக்கமுடியாத காயத்தை ஏற்படுத்திய உலகக் கோப்பைத் தொடர்களில் ஒன்று 2003 ஒருநாள் உலகக் கோப்பை.
2023 உலகக் கோப்பையில் கோலி, ரோஹித் ஆடிய ஆட்டங்களுக்கெல்லாம் முன்னோடியாக சச்சினும் கங்குலியும் அந்த உலகக் கோப்பையில் ஆடியிருந்தனர்.
அதில் முக்கியமான விஷயமே 1983-ல் கபில்தேவ் தலைமையில் முதல்முறையாக உலகக் கோப்பை வென்ற இந்தியா அதன் பிறகு 20 வருடங்கள் கழித்து 2003-ல் தான் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கே முன்னேறியதுதான்.

ஆனால், அந்தத் தொடரில் உச்சக்கட்ட ஃபார்மில் இருந்த ஆஸ்திரேலிய அணி இறுதிப்போட்டியில், கேப்டன் ரிக்கி பாண்டிங்கின் 140 நாட் அவுட் இன்னிங்ஸால் வெறும் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 359 ரன்களைக் குவித்து இந்தியாவுக்கு இமாலய இலக்கை நிர்ணயித்தது.
அந்தக் காலகட்டம் என்பது சச்சின் அவுட்டானால் `இனி என்ன இருக்கு மேட்ச்ல, அவ்ளோதான்’ என ரசிகர்கள் டிவி-யை அணைத்த காலம்.
எதிரணிகளும் அப்படித்தான், சச்சின் விக்கெட் எடுத்தால் வெற்றி தங்களுக்குத்தான் என்று இந்தியாவை அசால்ட்டாக டீல் செய்தனர்.
அன்று அந்த இறுதிப் போட்டியிலும் அதுதான் நிகழ்ந்தது. முதல் ஓவரில் 4 ரன்களில் சச்சின் அவுட்டானதுமே முடிவு தெரிந்துவிட்டது. சொல்லப்போனால் முதல் ஓவரிலேயே முடிவு தெரிந்த உலகக் கோப்பை போட்டி இதுதான். இதற்கு அடுத்ததுதான் 2015 உலகக் கோப்பை இறுதிப் போட்டி (முதல் ஓவரிலேயே மெக்கல்லம் அவுட்).
துரதிஷ்டவசமாக இந்தியாவின் உலகக் கோப்பை கனவு 2003 உலகக் கோப்பையில் வெற்றிக்கு ஓரடி தூரத்தில் சென்று மீண்டும் கனவாகிப்போனது.
ஆனால், ஒரு கேப்டனாக இந்திய அணியில் மிகப் பெரும் மாற்றத்துக்கு அச்சாரத்தைப் போடத் தொடங்கினார் கங்குலி.

இனி சச்சினை அவுட்டாக்கினாலும் இந்தியாவை வீழ்த்த முடியாது என இளம் மேட்ச் வின்னர்களை உருவாக்கினார்.
அவருக்குப் பின் தோனி, கோலி, ரோஹித் என எத்தனைக் கேப்டன்கள் வந்திருந்தாலும், சுப்மன் கில்லைத் தொடர்ந்து இன்னும் எத்தனை கேப்டன்கள் வந்தாலும், விதை… கங்குலி போட்டது.
இந்த நிலையில், தான் கேப்டனான குறித்த சுவாரஸ்யத்தை கங்குலி தற்போது பகிர்ந்திருக்கிறார்.
பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லேவுடனான யூடியூப் சேனல் நேர்காணலில் பேசிய கங்குலி, “எனக்கு கேப்டன் பதவி அளிக்கப்பட்டதே ஒரு கொந்தளிப்பான சூழலில்தான். ஏனெனில் சச்சின் கேப்டன்சி செய்ய விரும்பவில்லை.
ஒருவேளை சச்சின் கேப்டன்சி செய்ய விரும்பியிருந்தால், நான் ஒருபோதும் இந்தியாவின் கேப்டனாக இருந்திருக்கமாட்டேன். ஏனெனில் விளையாட்டில் அப்படித்தான் விஷயங்கள் விரைவாக மாறும்.

இந்திய அணியை வழிநடத்துவேன் என்று ஒருபோதும் நான் நினைத்ததில்லை. 1996-ல் நான் அறிமுகமானேன். அப்போது அது மிகவும் வித்தியாசமாக இருந்தது.
இந்தியா மிகவும் வித்தியாசமாக நடத்தப்பட்டது. இப்போது நிறைய மாறிவிட்டது. 29 ஆண்டுகள் ஆகிவிட்டன. காலம் இப்படித்தான் வேகமாகப் பறக்கிறது” என்று கூறினார்.

கங்குலி முதல்முறையாக 2000-ம் ஆண்டில் தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடரில் சச்சினுக்குப் பதில் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
அதன்பின்னர், 2002-ல் சாம்பியன்ஸ் டிராபி வென்றது (இலங்கையுடன் பகிர்வு), அதே ஆண்டில் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி ஒருநாள் தொடரை வென்றது (லார்ட்ஸ் மைதான பால்கனியில் கங்குலி தனது ஜெர்சியை கழற்றிய சுழற்றிய ஐகானிக் மொமென்ட்), 2003-ல் உலகக் கோப்பை இறுதிப் போட்டி, அதே ஆண்டில் ஆஸ்திரேலிய மண்ணில் முதல்முறையாக பார்டர் கவாஸ்கர் தொடரை 1 – 1 (4 போட்டிகள்) என சமன் செய்தது, 2004-ல் முதல்முறையாகப் பாகிஸ்தானில் டெஸ்ட் தொடரை வென்றது என கங்குலி கேப்டன்சியில் இந்தியா ஏராளமான உயரங்களைத் தொட்டது.
முக்கியமாக, ஜாகீர் கான், யுவராஜ் சிங், சேவாக், இர்ஃபான் பதான், கம்பீர், தோனி ஆகிய வீரர்கள் இந்திய அணியில் அறிமுகமானதும், மேட்ச் வின்னர்களாக பட்டை தீட்டப்பட்டதும் கங்குலி கேப்டன்சியில்தான். இல்லனா சும்மாவா வந்திருக்கும் `தாதா கங்குலி’ என்கிற பட்டம்!