சாத்தூர்: SI-யின் மனைவி தற்கொலையில் சந்தேகம்; உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்; பின்னணி என்ன?

விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்தவர் அருண் (28). இவர் சாத்தூர் நகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலைச் சேர்ந்த இளவரசியை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இத்தம்பதிக்கு 2 வயது பெண் குழந்தை உள்ளது. சாத்தூர் பாரதி நகரில் வாடகை வீட்டில் எஸ்.ஐ. அருண், மனைவி இளவரசி மற்றும் குழந்தையுடன் வசித்து வருகின்றனர். நேற்று ஆளுநர் நிகழ்ச்சிக்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அவரது செல்போனில் மனைவி இளவரசியின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில், “குழந்தையை நல்ல முறையில் பார்த்துக்கொள்ளவும், நன்றாகப் படிக்க வைக்கவும். நான் செல்கிறேன்” என்று பதிவிட்டிருந்ததைப் பார்த்து பதற்றமடைந்தார்.

சாலை மறியல்
சாலை மறியல்

உடனடியாக அருண் வீட்டுக்கு விரைந்து சென்று பார்த்தபோது, வீடு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது. கதவை உடைத்துத் திறந்து பார்த்தபோது, அருணின் மனைவி இளவரசி சேலையால் தூக்கிட்டுத் தொங்கியபடி இருந்தார்.

உடனடியாக காவல்துறையினர் உதவியுடன் இளவரசியின் உடலைக் கைப்பற்றி விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து சாத்தூர் நகர் காவல்நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 3 வருடங்களே ஆனதால் இளவரசியின் தற்கொலை குறித்து ஆர்டிஓ விசாரணை நடைபெறுகிறது.

சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கைது
சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கைது

இந்நிலையில், இளவரசியின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும், எஸ்.ஐ. அருணைக் கைது செய்ய வேண்டும் என்றும் கோரி, உயிரிழந்த இளவரசியின் உறவினர்கள் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே விருதுநகர் – காரியாபட்டி சாலையில் திடீரென அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் பேச்சுவார்த்தை பலனளிக்காததால், உறவினர்கள் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். பின்னர் சாலை போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்பியது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.