நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ள ஸ்டீபன் மற்றும் விஜய் சேதுபதி தயாரிப்பில் வந்த பேச்சி திரைப்படங்களைப் பாராட்டியுள்ளார் நடிகர் சூர்யா.

ஸ்டீபன் திரைப்படத்தில் உளவியல்ரீதியாக பாதிக்கப்பட்ட பாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் அறிமுக நடிகர் கோமதி சங்கரை குறிப்பிட்டு பாராட்டினார். “நன்கு சிந்தித்து எழுதப்பட்ட ஒரு கதையில் சவாலான பாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். படம் முழுவதும் அதன் தன்மை மாறாமல் பதைபதைப்பு குறையாமல் பயணித்துள்ளது” என தனது சமூக வலைத்தள பக்கத்தில் எழுதியுள்ளார் சூர்யா.
ஸ்டீபன் படத்தில் ஒன்பது இளம்பெண்களைக் காணவில்லை. அவர்களை ‘நான்தான் கொன்றேன்’ என சரண்டர் ஆகிறான் ஸ்டீபன் ஜெபராஜ் (கோமதி சங்கர்). கொலைகளுக்கான காரணத்தைக் கண்டறிய, ஸ்டீபனை விசாரிப்பது படமாக விரிகிறது.
சட்சட்டென மாறும் முகபாவங்கள், கணிக்க முடியாத செயல்கள் என உளவியல்ரீதியாக பாதிக்கப்பட்ட பாத்திரத்தை நம்பகமாகத் திரையில் வார்த்திருக்கிறார் அறிமுக நடிகர் கோமதி சங்கர்.

ஸ்டீபனுடன் ராஜமுத்து நடித்த ‘பேச்சி’ என்ற குறும்படத்தையும் மனம் திறந்து பாராட்டியுள்ளார் சூர்யா.
ராஜமுத்துவின் நடிப்பை, “மனதை நெகிழ வைக்கும் ஒரு அற்புதமான நடிப்பு” எனப் பாராட்டியுள்ளார்.
யூடியூபில் வெளியாகியிருக்கும் பேச்சி குறும்படம், ஒரு மேய்ப்பன், தனது தாயாரின் மறைவுச் செய்தியை அறிந்த பிறகு, மீண்டும் தன் சொந்த ஊருக்குப் பயணிக்கும் கதை. சாதி பாகுப்பாட்டையும், எளிய மனிதர்களின் வாழ்வியலையும் காட்டியிருக்கிறது.