துப்பாக்கிச் சூடு: தனி ஒருவனாக போராடி பலரை காப்பாற்றிய பழக்கடைகாரர் – யார் அந்த ஹீரோ?

ஆஸ்திரேலியாவில் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் தலைநகரான சிட்னியில் அமைந்துள்ளது பான்டி (Bondi) கடற்கரை. யூதர்களின் விழாவான ஹனுக்காவை (Hanukkah) கொண்டாட பான்டி கடற்கரையில் சுமார் 1,000 முதல் 2,000 பேர் கூடியிருந்தனர்.

அப்போது இரண்டு நபர்கள் கண்மூடித்தனமாக மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 14-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக நியூ சவுத் வேல்ஸ் மாகாண காவல்துறை தரப்பில், துப்பாக்கிச் சூடு நடத்திய இரண்டு பேரில் ஒருவர் போலீஸ் அதிகாரிகளுடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்ததாகவும், மற்றொரு நபர் காயங்களுடன் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sydney: காவல்துறை
Sydney: காவல்துறை

இதற்கிடையில், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட இருவரில் ஒருவரிடமிருந்து துப்பாக்கியைப் பிடுங்கி பலரின் உயிரைக் காப்பாற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வைரலானது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூட,
“ஹனுக்கா பண்டிகையைக் கொண்டாடக் கூடியிருந்த யூதர்கள் மீது நடத்தப்பட்ட அதிர்ச்சியூட்டும் தாக்குதலின் போது, அந்த மனிதரின் துணிச்சலான செயல்கள் பல உயிர்களைக் காப்பாற்றின” என அந்த நபரைப் பாராட்டினார்.

அதைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூட்டைத் தடுத்த அந்த மர்ம நபர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. தாக்குதல் நடத்தியவரைத் தடுத்து நிறுத்தியவர் அஹமது அல் அஹமது (43). சிட்னியைச் சேர்ந்த அஹமது அல் அஹமது, சதர்லேண்டில் ஒரு பழக்கடை வைத்திருக்கிறார். இந்தத் துப்பாக்கிச் சூட்டைத் தடுக்கும் முயற்சியில் அவர்மீதும் இரண்டு குண்டுகள் பாய்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கிறார். அஹமது அல் அஹமது குறித்து ஆஸ்திரேலிய ஊடகங்களிடம் பேசிய அவரது உறவினர் முஸ்தபா,
“அஹமது அல் அஹமது பழக்கடை வைத்திருக்கிறார். அவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றன.”

துப்பாக்கிப் பயன்படுத்துவது தொடர்பான எந்த அனுபவமும் அவருக்கு இருந்ததில்லை. ஆனால், அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் துணிவுடன் தாக்குதல் நடத்தியவர்களை எதிர்த்துள்ளார்.

அவர்மீது குண்டுகள் பாய்ந்ததாகவும், அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படுவதாகவும் கூறுகிறார்கள். உண்மையில் அஹமது அல் அஹமதுதான் உண்மையில் ஹீரோ. அவர் நலமாக இருப்பார் என்று நாங்கள் நம்புகிறோம்.” எனக் குறிப்பிட்டிருந்தார்.

ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ், “இந்த துப்பாக்கிச் சூட்டைத் தடுத்தவர்கள் அனைவரும் ஹீரோக்கள்” எனப் பாராட்டியிருக்கிறார்.

பான்டி கடற்கரை அமைந்துள்ள நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் முதல்வர் கிறிஸ் மின்ஸ்,
“நான் இதுவரை பார்த்திராத மிகவும் நம்பமுடியாத காட்சி இது. சமூகத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவரை எதிர்த்து, எண்ணற்றவர்களின் உயிரைக் காப்பாற்ற தனது சொந்த உயிரைப் பணயம் வைத்து, தனியொரு ஆளாக அவரிடமிருந்து ஆயுதத்தைப் பறித்துள்ளார்.

அந்த மனிதர் ஒரு உண்மையான நாயகன். அவருடைய வீரத்தின் விளைவாக இன்று பல மக்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.’

சவுத் வேல்ஸ் மாகாணத்தின் முதல்வர் கிறிஸ் மின்ஸ்
சவுத் வேல்ஸ் மாகாணத்தின் முதல்வர் கிறிஸ் மின்ஸ்

இந்தக் கொடூரமான சூழலிலும், முற்றிலும் அறிமுகமில்லாதவர்களுக்கு உதவ தங்கள் உயிரைப் பணயம் வைக்கத் தயாராக இருக்கும் அற்புதமான, துணிச்சலான ஆஸ்திரேலியர்கள் இன்னும் இருக்கிறார்கள்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

சிட்னி மார்னிங் ஹெரால்டு பத்திரிகை அஹமது அல் அஹமது வை “பல உயிர்களைக் காப்பாற்றிய ஒரு நாயகன்” என்று குறிப்பிட்டது.

ஆஸ்திரேலியாவின் முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதிகள் இந்தத் தாக்குதலைக் கண்டித்ததுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் தங்கள் ஆதரவைத் தெரிவித்திருக்கின்றனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.