சைபர் கிரிமினல்களால் தினமும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு பணத்தை இழந்து வருகின்றனர். அவர்கள் இப்போது அரசாங்கத்திற்கும் சவால் விடும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம், யவத்மால் மாவட்டத்தில் உள்ள செந்துர்சனி என்ற கிராமத்தில் புது வகையான ஒரு குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த கிராமத்தில் மொத்தமே 1500 பேர்தான் வசிக்கின்றனர். ஆனால் இக்கிராமத்தில் கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து நவம்பர் மாதம் வரை மூன்று மாதத்தில் 27397 குழந்தைகள் பிறந்திருப்பதாக மக்கள் பிறப்பு பதிவு சாப்ட்வேரில் பதிவாகி இருக்கிறது.
அதோடு மும்பையில் இருந்து பல நூறு கிலோமீட்டர் தொலைவில் மகாராஷ்டிராவின் விதர்பா பகுதியில் இருக்கும் இக்கிராமம் மும்பை வரைபடத்தில் இருப்பது போன்றும் காட்டப்பட்டுள்ளது. இந்த வேலையை சைபர் கிரிமினல்கள் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

27 ஆயிரத்திற்கு அதிகமான குழந்தைகள் இக்கிராமத்தில் பிறந்திருப்பதாக அதிகாரிகளின் கவனத்திற்கு வந்தவுடன் சுகாதாரத்துறை அதிகாரிகள் உண்மையை தெரிந்து கொள்ள அக்கிராமத்திற்கு நேரில் சென்றனர்.
அங்கு சென்றுபார்த்தபோது அப்படி எதுவும் இல்லை. இது குறித்து தொழில் நுட்ப விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி, ஜில்லா பரிஷத் அதிகாரியிடம் புகார் செய்தார். அதன் அடிப்படையில் இது குறித்து விசாரிக்க கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அக்கமிட்டியும் கிராமத்திற்கு சென்று நேரில் விசாரணை நடத்தி இருக்கிறது. அதோடு இது குறித்து யவத்மால் காவல் நிலையத்திலும் புகார் செய்யப்பட்டுள்ளது. மும்பை பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான கிரித் சோமையா செந்துர்சனி கிராமத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்திவிட்டு வந்திருக்கிறார்.
மாநில அரசின் இணையத்தளத்திற்குள் நுழைந்து யாரோ இது போன்ற ஒரு மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து டெல்லியில் உள்ள கூடுதல் பதிவாளருக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.